கம்போடியாவில் வேலை மோசடி கும்பல்களால் பாதிக்கப்பட்ட மலேசியர்களை திரும்ப நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஆதரவு அளித்ததற்காக, கம்போடிய பிரதமர் ஹுன் சென்னுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
கம்போடியாவிற்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அன்வார், வேலை மோசடி பிரச்சினையைத் தீர்ப்பதில் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதில் “ஹுன் சென்னின் தலைமைத்துவம் மிகச் சிறந்தது” என்று கூறினார்.
இந்தாண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாட்டில் வேலை மோசடியில் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் தொடர்பான 572 புகார்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கைகள் பாங்காக், புனோம் பென், வியன்டியான் மற்றும் யாங்கூனில் உள்ள மலேசிய தூதரகங்கள் மூலம் பெறப்பட்டன.
இதுவரை கம்போடியாவில் வேலை மோசடியால் பாதிக்கப்பட்ட 287 மலேசியர்கள் மீட்கப்பட்டு மீண்டும் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.