முதியவரை கொலை செய்ததாக 27 வயதான லோகமுருகன் மீது குற்றச்சாட்டு

சத்தம் போட்டதற்காக முதியவர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த இந்திய வம்சாவழி ஆடவர் அவரைக் கொலை செய்ததாக, மலாக்காவின் ஆயிர் கேரோ மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

முடிதிருத்தும் தொழில் செய்யும் எஸ் லோகமுருகன், 27, என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு, மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரதா ஷியென்ஹா முகமட் சுலைமான் முன்னிலையில் தமிழில் வாசிக்கப்பட்டவுடன், அவர் புரிந்ததாக தலையசைத்தார்.

ஆனால் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருப்பதால், மாவட்ட நீதிமன்றத்தில் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி, லோகமுருகன் மற்றும் இன்னும் தலைமறைவாக உள்ள மற்றுமொருவரும் சேர்ந்து, கடந்த பிப்ரவரி 27 அன்று, அதிகாலை 2.44 முதல் 3.10 வரை, ஜாலான் PPM , பிளாசா பாண்டான் மாலிமில் உள்ள 3 மாடி கட்டிடத்தின் பின்னால் சாடன் சஹாத், 57, என்பவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது மற்றும் இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனையை அவர் எதிர்கொள்ள நேரிடும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இவ்வழக்கில் எந்தவிதமான ஜாமீனும் வழங்கவில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு மீண்டும் மே 10-ம் தேதி பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here