கோலாலம்பூரில் மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் முறியடிப்பு ; 21 பேர் கைது

மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) நண்பகல் 2.30 மணியளவில் தேசா பார்க் சிட்டியில் உள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு விட்டுப் பிரிவில், குறித்த 20 முதல் 45 வயதுக்குட்பட்ட 18 ஆண்களும் 3 பெண்களும் கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.

“குறித்த கும்பல் ஒரு மோசடி அழைப்பு மையத்தை இயக்குகிறது மற்றும் இணையதளம் வழியாக ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறது.

“அவர்களிடமிருந்து 21 கணினிகள் மற்றும் 65 கைத்தொலைபேசிகள் ஆகியவற்றை நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் இன்று புதன்கிழமை (மார்ச் 29) செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் முந்தைய குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

“கைது செய்யப்பட்டவர்களில் 35 வயதுடைய ஒருவர், குறித்த கும்பலின் மேற்பார்வையாளராக இருந்ததாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மோசடிக் கும்பல் கடந்த மாதம் முதல் செயல்படுவதாகவும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் செயல்படுவதாகவும் ஏசிபி பெஹ் கூறினார்.

“இந்தக் கும்பலின் உறுப்பினர்களின் வேலை சூதாட்ட நடவடிக்கைகளை வழங்குவதன் மூலமும், கணக்குகளைத் திறப்பதன் மூலமும் ஆன்லைனில் வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதாகும்.

“ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் HK$100 (RM56) ஐ பதிவுக் கட்டணமாக நிரப்ப வேண்டும். இந்தக் கும்பல் முக்கியமாக ஹாங்காங்கில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்தது,” என்று அவர் கூறினார்.

இந்தக் கும்பல் ஒரு மாதம் செயல்பட்ட பிறகு சுமார் HK$600,000 (RM336,314) லாபம் ஈட்டியது என்றும் அவர் மேலும் கூறினார்.

“இதுபோன்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் செந்தூல் காவல்துறையை 03-40482222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here