இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 3) பிற்பகல் வரை ஒப்பந்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று மலேசிய மருத்துவ சங்கம் (MMA) தெரிவித்துள்ளது.
“மேலும் இதுவரை, மலேசிய மருத்துவ சங்கம் இன்று நடத்திய சோதனைகளின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார வசதிகள் எதிலும் வேலைநிறுத்தம் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது” என்று, மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர், டாக்டர் முருகராஜ் ராஜதுரை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஏப்ரல் 3 முதல் 5 வரை திட்டமிடப்பட்ட ஒப்பந்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, சுகாதார வசதிகள் வழக்கம் போல் செயல்படுகிறதா என்று சங்கத்திற்கு பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வருவதாகவும் டாக்டர் முருகராஜ் கூறினார்.
எனவே மக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் “பொது சுகாதார வசதிகள் வழக்கம் போல் செயல்படும் ” என்று அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
இன்று முதல் ஏப்ரல் 5 வரை ஒப்பந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும், இதனால் மருத்துவமனைகள் மற்றும் பொதுச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களுக்காக நோயாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கலாம் என்றும், அதனால் குறித்த நாட்களில் இந்த வசதிகளை தவிர்க்குமாறு போராட்டத்தின் ஏற்பாட்டாளரான Mogok Doktor Kontrak அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தியிருந்தது.
“இந்தப் பிரச்சினை குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி மக்களுக்கு பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே பொதுமக்கள் தாங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்க்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு மற்றும் ஈப்போ ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் நடத்திய சோதனைகளின் அடிப்படையில் அங்குள்ள சுகாதர வசதிகள் அனைத்தும் சீராக இருப்பதையும், சேவையில் எந்த இடையூறும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.