திவெட் எனப்படும் தொழில்நுட்பம், தொழில் கல்விப் பயிற்சி புதிய உருமாற்றம் காண இருப்பதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார். மலேசியர்கள் ஆர்வமுடன் பங்கேற்கும் ஒரு கல்வித்துறையாக திவெட் கல்விக்கு ஒரு புது உத்வேகம் தரப்படும் என்று அவர் சொன்னார். திவெட் கல்வியானது இன்றளவில் மலேசியர்கள் மத்தியில் குறைந்த மதிப்பிலான ஒரு பார்வையில் இருக்கிறது.
உண்மை நிலையில் இந்த திவெட் கல்வியானது ஒரு மனிதனுக்கு வாழ்க்கை உயர்வைத் தரக்கூடிய மிகச்சிறப்பான ஒரு கல்வி என்பதை மலேசியர்கள் உணரும் வகையில் அதற்கு புதிய வடிவம் தரப்படும் என்று தெரிவித்த அவர், சிறந்த மனித மூலதனத்தைத் தரக்கூடிய ஒரு துறையாகவும் அது இருப்பது மலேசியர்களுக்குத் தெள்ளத்தெளிவாகச் சொல்லப்படும் என்றார்.
இதற்காக ஒரு விழிப்புணர்வு இயக்கமும் அதனை விளம்பரப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் ஓசை நாளிதழுக்கு இன்று காலை மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்ட சிவகுமார் குறிப்பிட்டார். திவெட் கல்வியானது சான்றிதழ், டிப்ளோமா, இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் படிப்பு வரையில் இருப்பதை மலேசியர்கள் மிகக் குறைவாகவே தெரிந்து வைத்துள்ளனர்.

இங்கு நம் நாட்டில் இந்தத் துறைக்கு மாணவர்கள் தரும் ஆதரவு மிகக்குறைவாக இருக்கிறது. பெற்றோர் மத்தியிலும் ஒரு தெளிவும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டிலும் டெல்லியிலும் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. அங்கு திவெட் கல்விக்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைக் கடந்து விடுகிறது. அந்த அளவுக்கு இக்கல்வி அங்கு பிரபலமடைந்திருக்கிறது.
மலேசியாவில் திவெட் கல்வியை ஊக்குவிப்பதற்கு சான்றிதழ் அல்லது டிப்ளோமா பெற்ற ஒருவருக்கு குறைந்தபட்ச சம்பளம் 3 ஆயிரம் ரிங்கிட் மாதச் சம்பளம் வழங்க வேண்டும். இது சாத்தியமானால் இந்தக் கல்வித்துறை மாபெரும் வெற்றியைப் பெற்று அதன் இலக்கை அடைய முடியும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி அண்மையில் கூறியிருந்ததை சிவகுமார் சுட்டிக்காட்டினார். மக்கள் ஓசை நாளிதழின் சிறப்பு அழைப்பை நேற்று மக்கள் ஓசை அலுவலகம் வந்த சிவகுமாரை மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபால கிருஷ்ணன் சண்முகமணி வரவேற்று பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொண்டார். மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜன், ஆசிரியர் குழு ஆலோசகர் இரா. முத்தரசன், மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளர் ரவீந்திரன், தனிச்செயலாளர் மகேஸ்வரி, சிறப்பு அதிகாரி சுகுமாரன் பெரியசாமி, பத்திரிகைச் செயலாளர் சிம், அமைச்சரின் தமிழ்ப் பத்திரிகைச் செயலாளர் செ. வே. முத்தமிழ்மன்னன், சொக்சோ முதலீட்டுத்துறை இயக்குநர் வாரிய உறுப்பினர் டி. கண்ணன், யயாசான் கோ ஸ்ட்ரோங் மலேசியா இயக்கத்தின் இயக்குநர் மோர்னா அனித்தா ரெட்டி, என்யூடிபி (தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம்) தேசியத் தலைவர் அமினுடின் அவாங் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.









