நிலையற்று காணப்படும் தற்போதைய பொருளியல் சூழலால் தங்களின் வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சம் மலேசியாவில் பலரிடையே இருக்கிறது. இது குறித்து நடைபெற்ற கருத்தாய்வு ஒன்றில் பங்கேற்றோரில் பாதிக்கும் அதிகமான மலேசியர்கள் வேலை பறிபோகும் அச்சம் இருப்பதாகத் தெரிவித்தனர்.
அதிகாரபூர்வமாக ஒரு நிறுவனத்தின் ஊழியராக வேலைக்கு எடுக்கப்படுவதையே விரும்புவதாக ஐந்தில் மூன்று மலேசியர்கள் கூறினர். அதற்கு வகைசெய்யும் ஒப்பந்தம் இல்லாத வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
ராண்ட்ஸ்டாட் நிறுவனத்தின் மலேசிய கிளையின் இந்தக் கருத்தாய்வு எட்டு நாடுகளைச் சேர்ந்த 750 பேரைக் கொண்டு நடத்தப்பட்டது.
நிலையற்ற பொருளியலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் 80 விழுக்காட்டினருக்கு உள்ளது. எனினும், வேலை பார்க்கும் நிறுவனங்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்ற வலுவான நம்பிக்கை இருப்பதாக 86 விழுக்காட்டினர் கூறினர்.
வேலை நிலைத்தன்மை, நிலையான வருமானம், ஓய்வுகாலத் திட்டம் உள்ளிட்ட அம்சங்களை வேலை தேடுவோர் அதிகம் கருத்தில்கொள்வதாக கருத்தாய்வில் தெரியவந்தது.
உலகளவில் பல வர்த்தகங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. அதோடு, பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்கின்றன.
இத்தகைய சூழலில் வேலை தேடுவோரும் ஊழியர்களும் வேலை நிலைத்தன்மை, வருமானம் ஆகிய அம்சங்களைப் பற்றிக் கவலை கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கணிசமான சம்பள உயர்வு இல்லாத வேலைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கருத்தாய்வில் பங்கேற்ற 65 விழுக்காட்டினர் கூறினர். அதேவேளையில், வருமானம் போதாமல் போனதால் வேலையை விடவேண்டிய நிலை ஏற்பட்டதாக 38 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.









