புண்ணியங்களின் பூக்காலமான புனித ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று, தவறாமல் திருக்குர்ஆன் ஓதி, இரவுகளில் நின்று வணங்கி, இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டு, இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றான ‘ஸகாத்தையும்’ நிறைவேற்றி, படைத்த இறைவனுக்காகப் பசித்து, தனித்து, விழித்திருந்து புனித ரமலான் மாதம் முடிந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாகக் (‘ஈத் அல் ஃபித்ர்’) கொண்டாடுகிறோம். இதையேதான் நோன்புப் பெருநாள் என்றும் அழைக்கிறோம்.
ஈத் அல் பித்ர் அன்று நோன்பு நோற்கக் கூடாது. ரமதானில் எடுத்துக் கொண்ட புலனடக்கப் பயிற்சியை அதன் பின்வரும் நாட்களிலும் பேணுதல் அவசியம். ஈகைப் பெருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப்போல் நம்முடைய சமுதாய மக்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட நாம் கடமையான ஸக்காத்தை தர்மத்தை முழுமையாக, சரியாகச் செய்வோம். நாம் செய்யும் சிறிய தர்மத்தால் ஒரு சிலராவது பயன்பெறுவார்கள்.
ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதனை மனதில் நிறுத்திக் கொண்டு பிறருக்கு நன்மைகளைச் செய்து நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் சகல மக்களும் சகோதர பாசத்துடன் வாழ எல்லாம் வல்லோனைப் பிரார்த்திப்போம்.