கெடாவில் வெள்ளிக்கிழமை தொழுகை ; SOPயை மீறியதற்காக 13 பேருக்கு அபராதம்

அலோர் ஸ்டார், (ஜூன் 26) :

கோல கெடாவில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் என்று நம்பப்படும் 13 பேருக்கு, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (MCO) கீழ் எஸ்.ஓ.பி. களை மீறியதற்காக தலா 1,500 வெள்ளி  அபராதமாக மொத்தம் 19,500 வெள்ளி விதிக்கப்பட்டுள்ளது .

கோத்தா ஸ்டார் காவல்துறைத் தலைவர் அகமட் சுக்ரி மாட் அஹிர் இது தொடர்பில் கருத்துரைத்த போது, பொதுமக்கள் கொடுத்த தகவல்களின் பேரில், மூன்று கோவிட் -19 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு குழுவுடன் பிற்பகல் 2 மணியளவில் அந்த இடத்திற்குச் சென்றதாகவும் மசூதிக்குள் குழந்தைகள் உட்பட 34 பேர் இருந்ததாகவும் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன் முதலில் தொழுகையை முடிக்க அனுமதித்தோம். அத்துடன் தொழுகையில் ஈடுபட்டவர்களது உடல் ரீதியான தூரத்தைக் கவனித்தோம், பிரார்த்தனைகளின் போது அவர்கள் முகக்கவசங்களை அணிந்திருந்தார்கள், ஆனால் ஒன்றுகூடும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து அவர்கள் SOP ஐ மீறியிருந்தனர், ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கெடா இஸ்லாமிய மத விவகாரத் துறையின் எம்.சி.ஓ காலத்தில் மத நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளின் அடிப்படையில், மசூதி அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் அடங்கிய 13 பேர் மட்டுமே மாநிலத்தில் உள்ள மசூதிகள் மற்றும் சூராவுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த மசூதியில் கூடியிருந்த 34 பேரில், 18 முதல் 82 வயதுக்குட்பட்ட 13 நபர்களுக்கு எதிராக தலா 1,500 வெள்ளி அபராதமும் எஸ்ஓபியுடன் இணங்குவதை உறுதி செய்யத் தவறியதற்காக மசூதிக்கு 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அடங்கியவர்களுக்கு நியாயமான காரணங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது என்றும் சுக்ரி கூறினார்.

இதற்கிடையில், கோவிட் -19 தொற்றுநோய் நிலைமை நாட்டில் கடந்த ஒருவடங்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், இன்னமும் சிலர் நொண்டி சாக்குகளை சொல்லுபவர்கள் அல்லது எஸ்ஓபி பற்றி தெரியாது என்று பாசாங்கு செய்பவர்கள் மேலும் விதிமுறைகளை மீறியவர்கள் இன்னும் நடமாடிக் கொண்டுதான் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here