மழை வீழ்ச்சியைத் தூண்டுவதற்கும், தீவில் உள்ள இரண்டு குளங்களை நிரப்புவதற்குமாக செயற்கை மழையை பொழிவிப்பதற்காக, மேக விதைப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என்று, பினாங்கு நீர் வழங்கல் கழகம் தெரிவித்துள்ளது.
ஆயிர் ஈத்தாம் மற்றும் தெலுக் பஹாங் குளங்களின் நீர் பிடிப்பு பகுதிகளை இலக்கு வைத்து, மலேசியன் வான்படையின் (RMAF) உதவியுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அது கூறியுள்ளது.
ஏப்ரல் 29 முதல் மே 7 வரை முதல் கட்ட நடவடிக்கைகளுக்காக மேக விதைப்பை மேற்கொள்ள மலேசிய வனிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது, என்று பினாங்கு நீர் வழங்கல் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி கே.பத்மநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) தெரிவித்தார்.
இரண்டு அணைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அதிக மழையைப் பொழியச் செய்து, அவற்றை முடிந்த அளவு நீர் நிரப்புவதே முதன்மை நோக்கமாகும் என்றார்.
ஆயிர் ஈத்தாம் குளத்தில் இந்த ஜனவரியில் 82.5 விழுக்காடு இருந்த நீர் கொள்ளளவு தற்போது 44.8 விழுக்காடாகவும் , 64.0 விழுக்காடாக இருந்த தெலுக் பஹாங் குளத்தின் நீர்க்கொள்ளளவு தற்போது 48.6 விழுக்காடாகவும் உள்ளது என்றார்.