சூடானின் கார்டூமில் சிக்கித் தவித்த 30 மலேசியர்களும் 30 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு 1,233 கி.மீ தூரத்தை கடந்து, நேற்று திங்கட்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.08 மணிக்கு சூடான் துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தனர் என்று, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
அதே நேரத்தில் சூடானிலுள்ள மலேசியர்களை மீட்பதற்கான அரப்பு நடவடிக்கை படையினர் (TF) மேலும் 26 பிற நாட்டு குடிமக்களையும் மீட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏனைய நாட்டவர்களில் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் , ஆறு கம்போடியர்கள், 14 சிங்கப்பூரர்கள், ஒரு தாய்லாந்து நாட்டவர், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு பாலஸ்தீனியர் மற்றும் ஒரு சூடானியர் ஆகியோர் அடங்குவர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“மீட்கப்பட்ட இந்த 56 பேரையும் சூடான் துறைமுகப்பகுதியில் இருந்து விமானம் (சிறப்பு விமானம்) அல்லது கடல் மூலம் வெளியேற்ற முயற்சிக்கிறோம். இது எந்த தரப்பினரிடம் விரைவான மற்றும் உடனடி அனுமதி கிடைக்கிறதோ, அதைப் பொறுத்து எந்த மார்க்கம் வழி கொண்டுவருவது என முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.









