உலகின் ஆபத்து நிறைந்த 10 நாடுகள் இதுதானாம்

வாஷிங்டன்: உலகில் ஆபத்து நிறைந்த 10 நாடுகளின் பட்டியலை “உலகளாவிய அமைதி குறியீடு” வெளியிட்டுள்ளது. நாட்டில் மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளின் விவரங்களை பார்க்கலாம்.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் மற்றும் உலகின் ஆபத்து நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வு பட்டியலை ஆண்டுதோறும் சில அமைப்புகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான இன்ஸ்ட்டியூட் அமைப்பு ஆண்டு தோறும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.

“உலகளாவிய அமைதி குறியீடு” என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் உலகில் உள்ள நாடுகளில் மக்களுக்கு ஆபத்து மிக்க நாடுகள் எது என்பதை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், நடப்பு ஆண்டில் வெளியான அறிக்கையில் உலகின் ஆபத்தான 10 நாடுகளை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இதில் எந்தெந்த நாடுகள் இடம் பெற்றுள்ளது என்ற விவரங்களை பார்க்கலாம்.

* 10 வது இடத்தில் சூடான்: உலகின் ஆபத்தான நாடுகள் வரிசையில் 10-வது இடத்தில் சூடான் உள்ளது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக நடைபெறும் இந்த மோதலால் பெரும் உயிர் சேதங்களும் அசாதாரண சூழலும் அந்த நாட்டில் தற்போது உள்ளது. 3.002 புள்ளிகள் பெற்று இந்தப் பட்டியலில் 10-வது இடத்தில் சூடான் உள்ளது.

* இந்தப் பட்டியலில் 9-வது இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடு உள்ளது. இந்த நாட்டில் 54.61 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். தெற்கு சூடான் மற்றும் காங்கோ ஆகிய நாடுகள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் அண்டை நாடுகளாக உள்ளன. இதுவும் ஒரு ஆப்பிரிக்க நாடுதான்.

* உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் நாடு சோமாலியா.. ஏழ்மை நாடான சோமாலியாவில் கொலை, கொள்ளை போன்ற வன்முறை சம்பங்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாவதுண்டு. இது கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஆகும்.

* உள்நாட்டு பிரச்சினைகள் மட்டும் இன்றி வெளியில் இருந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடாக ஈராக் உள்ளது. இந்த நாடு பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. இந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் தற்போதும் அதிகமாக உள்ளது.

* காங்கோ ஜனநாயக குடியரசு(DR Congo) மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ, இந்த பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில், கடத்தல், கார்களை திருடுவது, நெடுஞ்சாலைகளில் வாகனங்களை மறித்து திருடுவது..கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்ற செயல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

* தெற்கு சூடான் – இந்த நாடு இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், துணை-சஹாரா பிராந்தியத்தில் அமைதி குறைந்த நாடாக இது உள்ளது.

* இந்த பட்டியலில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரால் அதிக சேதங்களை எதிர்கொள்ளும் நாடாக உக்ரைனே இருந்தாலும் இந்த இருநாடுகளில் ரஷ்யாதான் ஆபத்து அதிகம் நிறைந்த நாடு என்று ஆய்வு சொல்கிறது. 2011 ஆம் அண்டு முதல் உள்நாட்டு போரால் கடுமையாக போராடிக் கொண்டு இருக்கும் சிரியா இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

* சர்வதேச அளவில் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நாடாக ஏமன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. ஏமன் நாடு உலகின் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

* உலகின் ஆபத்து அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் தான் இருந்து வருகிறது. உள்நாட்டு போர் நடந்து வந்த நிலையில், தற்போது தலீபான்களிடம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இந்த பூமியில் மிகவும் ஆபத்தான நாடு ஆப்கானிஸ்தான் தான் என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here