எண்ணெய் டேங்கர் தீ: காணாமல்போன மூன்று பணியாளர்களை தேடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

மே 1ஆம் தேதியன்று எண்ணெய் டேங்கர் தீப்பிடித்ததில் காணாமல் போன MT Pablo டேங்கரின் மூன்று பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை புதிய தடங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று, ஜோகூர் மலேசிய கடல்சார் அமலாக்க துறை இயக்குனர் முதல் அட்மிரல் நூருல் ஹிசாம் ஜகாரியா கூறினார்;

ஐந்தாவது நாளை எட்டிய இந்த நடவடிக்கை, நேற்று (மே 5) இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்டது என்றார்.

நேற்றைய தினம் குறித்த கப்பலில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும், காணாமல் போன மூன்று பணியாளர்கள் இன்னும் கப்பலில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

மேலும் “கப்பலின் பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில், ஜோகூர் பாரு கடல்சார் மீட்பு துணை மையம் (MRSC) புதிய தடங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் பணியை ஒத்திவைத்துள்ளது” என்று அவர் சனிக்கிழமை (மே 6) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காணாமல் போன மூன்று பணியாளர்களில் இருவர் இந்திய நாட்டவர்கள் – சத்யம் திரிபாதி, 26, மற்றும் தினேஷ் குமார் சவுகான், 34; மற்றும் உக்ரேனியரான சபித் ஷெண்டெரோவ்ஸ்கி, 37 ஆகியோராவர்.

ஆப்பிரிக்காவின் காபோனில் பதிவுசெய்யப்பட்ட டேங்க என்ற டேங்கர் மே 1 அன்று தஞ்சோங் செடிலி, கோத்தா திங்கிக்கு வடகிழக்கே 37.5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here