2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தடைசெய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, நிக் நஸ்மி நிக் அஹ்மட் தெரிவித்தார்.
“நெகிழிப்பைகள் வேண்டாம்” என்ற பிரச்சாரம் முதலில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பெரிய கடைகள் போன்ற நிலையான வணிக இடங்களில் தொடங்கி, பின்னர் கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் மேலும் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து விற்பனை நிலையங்களிலும் இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்பட்ட பிறகு மற்ற வணிக இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
மலேசியாவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப்பைகளால் ஏற்படும் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான நீண்ட கால திட்டமாக பல்வேறு மாநில அரசுகள் தலைமையிலான இந்த முயற்சி செயற்படுத்தப்படும் என்று, இன்று செவ்வாய்கிழமை (மே 9) நடைபெற்ற மடானி நிகழ்வில் ” மறுபயன்பாட்டு பை மற்றும் நெகிழிப்பை வேண்டாம்” என்ற பிரச்சார வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையில் நிக் நஸ்மி கூறினார்.
“பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை ஒரு சவாலான பிரச்சினையாகும், இந்த சிக்கலை எதிர்கொள்ளும் உலகின் முதல் 10 நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும் என்று கூறிய அவர், “இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) அறிக்கையின்படி, மலேசியா 2020 ஆம் ஆண்டில் உணவுப் பொட்டலத்திற்காக மட்டும் 148,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியது என்று தெரிவித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய சாதனையல்ல” என்று அவர் மேலும் கூறினார்.