சண்டாக்கானில் மீன் பிடிக்கச் சென்ற தனித்து வாழும் தந்தை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சபாவின் கிழக்குக் கடற்கரையான சண்டாக்கான் மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தனித்து வாழும் தந்தை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று வெள்ளியன்று (மே 12) காலை 9.50 மணியளவில் தஞ்சோங் பிசாவுக்கு கிழக்கே சுமார் 0.7 கடல் மைல் தொலைவில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவின் ரோந்துப் படகு மற்றும் மீனவர்களால் அஸ்மின் லசைத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

45 வயதுடைய பாதிக்கப்பட்டவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பங்காவன் கடற்பரப்பில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சண்டாக்கான் மண்டல MMEA இயக்குனர் கேப்டன் ஜைனுதீன் முகமட் ஜூகி கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் படகு கடலில் மிதப்பதை மீனவர்கள் கண்டறிந்ததையடுத்து, கோத்தா கினாபாலுவில் உள்ள அவர்களின் கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை உடனடியாக அதே நாளில் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கப்பட்டது என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

உயிரிழந்த அஸ்மின் ஒரு தனித்து வாழும் தந்தை என்றும், அவர் இரண்டு மகள்களை வளர்த்து வருகிறார், அவர்களில் ஒருவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் விவியன் வோங் கூறினார்.

மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேப்டன் ஜைனுதீன் அறிவுறுத்தினார். அவசரநிலை ஏற்பட்டால், 089-229504 என்ற எண்ணில் 24 மணி நேரமும் செயல்படும் சண்டாக்கான் எம்எம்இஏ அலுவலகத்தையோ அல்லது மலேசியன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சர்வீசஸ் (மெர்ஸ்) 999 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here