சபாக் பெர்னாம் அருகேயுள்ள சுங்கை பெசார், ஜாலான் தெலுக் இந்தான்-கிள்ளான் சாலையின் 48ஆவது கிலோமீட்டரில் உள்ள மேம்பாலத்தில் லோரியின் பின்பக்கத்தில் கார் மோதிய விபத்தில், இராணுவ அதிகாரி மற்றும் இராணுவ வீரர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
குறித்த இருவரும் நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சனுக்கான பயணம் செய்துகொண்டிருந்தபோது, பிற்பகல் 3.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் 28 மற்றும் 49 வயதுடைய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று, சபாக் பெர்னாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அகஸ் சலீம் முகமட் அலியாஸ் கூறினார்.
சம்பவத்தின் போது, 35 வயதுடைய நபரால் ஓட்டப்பட்ட இசுஸு லோரி அப்பகுதியில் சாலையை சுத்தம் செய்து முடித்ததாக நம்பப்படுகிறது. சுத்தப்படுத்தும் பணி முடிந்து கூம்புகளை சேகரிக்க லோரியை ஓட்டுநர் பின்பக்கமாக ஓட்டினார். அந்த நேரத்தில், பலியான இருவர் ஓட்டிச் சென்ற கார் லோரியின் பின்புறத்தில் மோதியது,” என்று அவர் கூறினார்.
இந்த விபத்தில் லோரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.
“உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.








