உதவி கோரும் இந்திய மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு இந்தியர் நலன் காக்கும் தனிப்பெரும் அமைப்பாக மித்ரா மாறுமா?

பிரதமர் இலாகா கீழ் செயல்படும் இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு (மித்ரா) உதவி கேட்டு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருக்கிறது.

அமைச்சர், துணை அமைச்சர் ஆகியோரிடம் செல்லாமல் இப்போது இந்திய சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் மித்ராவை நாடி வந்திருக்கின்றனர். நாட்டின் 2023 தேசிய பட்ஜெட்டில் 100 மில்லியன் ரிங்கிட் மித்ராவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

உதவி கேட்டு நேற்று வரை வந்து கிடைத்திருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து பார்த்ததில் தேவைகள் மூன்று மடங்காக அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மித்ரா மீது படிந்திருக்கும் களங்கத்தைப் போக்குவதற்காக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் மித்ரா சிறப்புப் பணிக் குழுவை அமைத்து அதன் உறுப்பினர்களாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன், ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் செனட்டர் சி. சிவராஜ் போன்றோரை நியமனம் செய்தார்.

டத்தோ ரமணன் மித்ரா சிறப்புப் பணிக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒரு புதிய நம்பிக்கையை துளிர்க்க வைத்திருக்கிறார்.

இதன் காரணமாக டாக்சி ஓட்டுநர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இப்போது மித்ராவை நாடும் சுழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் அவர் அறிவித்த சில திட்டங்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இன்னும் சில காலத்தில் புதிய திட்டங்களை அவர் அறிவிக்கவிருக்கிறார்.

கிட்டத்தட்ட 10 அம்சங்கள் தற்போது இந்தப் பணிக் குழுவின் பரிசீலனையில் இருந்து வருகின்றது. இவை பிரதமரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் பார்வைக்குக்கொண்டு செல்லப்பட்டு கொள்கையாக வடிவம் பெற்ற பின்னர், இதன் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

அரசு பல்கலைக்கழக 2ஆம், 3ஆம், 4ஆம், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஒரே தடவை உதவித் தொகையாக தலா 2,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது. அதேபோல் தனியார் தமிழ் பாலர் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி உட்பட கல்விக் கட்டணமாக தலா 200 ரிங்கிட் வழங்கப்படுகிறது. மேலும், சிறுநீரக சுத்திகரிப்புக்கு ஒரு நோயாளிக்கு ஒரு முறை சிகிச்சைக்கு தலா 200 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

இந்த நிதி யாவும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும். உதாரணமாக பாலர் பள்ளி கட்டணம் பெற்றோரிடம் வழங்கப்படாமல் பாலர் பள்ளி நடத்துபவரின் வங்கிக் கணக்கில் அந்த நிதி சேர்க்கப்படும். அதேபோன்று சுத்திகரிப்பு மையங்களில் வங்கிக் கணக்கில் உதவித் தொகை சேர்க்கப்படும்.

மித்ரா சிறப்புப் பணிக் குழுவின் ஆக்கப்பூர்வமான பணிகள், நடவடிக்கைகள் மக்கள் மத்தியில், குறிப்பாக உதவி தேவைப்படும் பி40 தரப்பு மத்தியில் புதிய நம்பிக்கையை துளிரச் செய்திருக்கிறது. குவிந்து வரும் விண்ணப்பங்கள் இதனை நிரூபிப்பதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here