கடந்த சனிக்கிழமை பேராக் ஸ்டேடியத்தில் நடந்த காற்பந்து போட்டியின் போது, கலவரத்தில் ஈடுபட்டதற்காக, மூன்று பேருக்கு தலா 2,000 ரிங்கிட் அபராதம், தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து, ஈப்போ மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட முஹமட் அமிருல் அஸ்னில் மாட் பாண்டிர், 26, முஹமட் அய்மான் ஃபிர்தௌஸ் பத்ருல் ஹிஸாம், 21, மற்றும் முஹமட் ஹயான் சூஃபி முஹமட் சப்ரி, 20, ஆகியோருக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.புனிதா அபராதம் விதித்தார்.
இவ்வழக்கில் 17 வயதுடைய மற்றொருவரும் குற்றம் சாட்டப்பட்டவர், அவரது தகுதிகாண் அறிக்கை நிலுவையில் இருக்கும்பட்ஷத்தில், அவர் ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM1,500 பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார், மற்றும் நீதிமன்றம் ஜூன் 28 அன்று அவருக்கு எதிரான குற்றச்சாட்டை மீண்டும் செவிமடுக்கும்.
கடந்த சனிக்கிழமை இரவு 9.17 மணியளவில் மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் நால்வர் மீதும் குற்றவியல் சட்டம் 147வது பிரிவின் கீழ் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.
பேராக் மற்றும் சிலாங்கூர் காற்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சூப்பர் லீக் போட்டியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








