பாகன் டத்தோ அருகே படகு மூலம் 40 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

40 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, இந்தோனேசியாவின் தஞ்சோங் பாலாய் நோக்கிச் சென்ற படகை, பாகன் டத்தோ அருகே கடல்சார் அமலாக்கத் துறையினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 28) காலை 10 மணியளவில், தஞ்சோங் பெட்டிங் பெராஸ் பாசா கடற்கரையில் இருந்து சுமார் 1.1 கடல் மைல் தொலைவில் படகு கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

என்ஜின் கோளாறு காரணமாக படகு காலை 8 மணி முதல் தத்தளித்துக்கொண்டிருந்ததாக முகமட் யூஸ்ரி தெரிவித்தார்.

“படகில் நடத்தப்பட்ட சோதனையில், 11 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்று முதல் 55 வயது வரையிலான 40 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

“படகை ஓட்டியதாக நம்பப்படும் 47 வயதான இந்தோனேசியரும், 23 மற்றும் 24 வயதுடைய அவரது உதவியாளர்களில் இருவர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக தண்ணீரில் குதித்தனர், ஆனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் இன்று திங்கள்கிழமை (மே 29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“அனைத்து பயணிகளும் படகின் பணியாளர்களும் அடுத்த நடவடிக்கைக்காக சித்தியாவானில் உள்ள கம்போங் ஆச்சேயில் உள்ள கடல்சார் காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here