‘ஜோகூர் எல்லைகளில் கூடுதல் முகப்புகள் இயங்கவேண்டும்’ – ஜிமி லியோங்

சிங்கப்பூருடனான இரண்டு நிலவழி எல்லைகளிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மலேசியாவின் சுற்றுப்பயணத் துறை மேம்படுவதற்கு உதவும் என்று மலேசிய சுற்றுப்பயண வழிகாட்டிகள் குழு கூறியுள்ளது.

இவ்விரு நில எல்லைகளிலும் உள்ள எல்லா குடிநுழைவு முகப்புச் சேவைகளும் இயங்கவேண்டும் என்று சுற்றுப்பயண வழிகாட்டிகள் குழுவின் தலைவர் ஜிமி லியோங் சொன்னார். குறிப்பாக வாரயிறுதி நாட்களிலும் விடுமுறை காலத்திலும் பரபரப்பான நேரத்துக்கு இது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

“வாரயிறுதி நாள்களில் 100க்கும் அதிகமான பேருந்துகள் ஜோகூருக்குள் வரும். அப்படி இருக்கையில் குடிநுழைவு சுங்கச் சாவடிகளில் மக்கள் மூன்று மணிநேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கவேண்டியது வருத்தம் அளிக்கிறது,” என்று லியோங் மேலும் கூறினார்.

கடந்த சனிக்கிழமை ( ஜூன் 3) காலையில் இரண்டாம் இணைப்பில் இரு குடிநுழைவு முகப்புச் சேவைகள் மட்டும் திறந்திருந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

“இரண்டாம் இணைப்பில் பேருந்தில் வருவோரைச் சோதிக்க இரண்டு கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எட்டிலிருந்து 10 குடிநுழைவு முகப்புச் சேவைகள் இருக்கின்றன.

“அப்படியென்றால் சனிக்கிழமை காலை இரண்டு முகப்புச் சேவைகள் மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது ஏன்? எல்லா சேவைகளையும் திறந்துவிடுவதற்கு வகைசெய்ய ஏன் போதுமான அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவில்லை?” என்று திரு லியோங் கேள்வி எழுப்பினார்.

ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காஸி இரண்டு நிலவழி எல்லைகளுக்கும் அவ்வப்போது சென்று பார்வையிடுவார் என்று கூறிய அவர், மந்திரி பெசார் பார்வையிடாத நேரங்களிலும் முகப்புச் சேவைகள் திறந்திருக்கவேண்டும் என்றும் கூறினார்.

கடந்த நீண்ட வார இறுதியில் இரு நிலவழி எல்லைகளிலும் என்றும் இல்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைச் சமாளிக்க பிஎஸ்ஐ, கேஎஸ்ஏபி குடிநுழைவு நிலையங்களில் கூடுதல் சாலைத் தடங்களைத் திறந்துவிடுமாறு ஜோகூர் மாநில அரசாங்கம் பரிந்துரைத்ததென ஒன் ஹஃபிஸ் பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

லியோங் குறிப்பிட்டதைப் போல் சிங்கப்பூரில் இருக்கும் பள்ளி விடுமுறைக் காலம், வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக இருந்ததால் வந்த நீண்ட வார இறுதி ஆகியவையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கான காரணங்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here