பினாங்கு போலீஸ் தலைவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் எதிரொலி ; 13 பேர் கைது

பினாங்கு போலீஸ் தலைவருக்கு விடுக்கப்பட்ட சட்டவிரோத வட்டி முதலைகளின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவும், அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கிலும் பினாங்கு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், 13 உரிமம் பெறாத கடன் வழங்குநர்களை (ஆலோங்) பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சிறப்பு நடவடிக்கை தொடங்கியதில் இருந்து (ஜூன் 5) 24 மணி நேரத்திற்குள் வட்டி முதலைகள் என நம்பப்படும் 13 பேர் மாநிலம் முழுவதும் தனித்தனி இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று, பினாங்கு காவல் துறைத் தலைவர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு, வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் பணியாளர்கள் என மொத்தம் 112 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் பணிக்குழு, 28 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக ,” அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், 13 சந்தேக நபர்களும் பிரிவு 5 (2) பணமுதலைகள் சட்டம் 1951 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக காவ் கூறினார்.

“பினாங்கு காவல்துறைத் தலைவருக்கு அச்சுறுத்தல் கொண்ட எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பிய சந்தேக நபர்களை கண்டறியும் நடவடிக்கையில் காவல்துறையினர் இருப்பதாகவும், நாட்டில் குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளைத் துடைப்பதை நோக்கமாகக் கொண்டு சேவையாற்றும் காவல்துறையினர், தங்கள் கடமைகளைச் செய்யும்போது, காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிடும் எந்தவொரு தனிநபருடனும் அல்லது கும்பல்களுடனும் காவல்துறை எந்தவொரு சமரசமும் செய்யாது என்று”, காவல்துறைத் தலைவர் (IGP) டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here