டாக்டர் மகாதீரின் அரசுக்கு ஜப்பான் வழங்கிய RM207 பில்லியன் தொடர்பில் பரிசீலியுங்கள்: ராயர்

சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடாக, கடந்த 2004 இல் புத்ராஜெயாவிற்கு ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய RM207 பில்லியன் நிதி தொடர்பில் பரிசீலிக்குமாறு தேசிய கணக்காய்வாளர் துறைக்கு R.S.N ராயர் (ஜெலுதோங் -PH) அழைப்பு விடுத்துள்ளார்.

“துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமராக இருந்தபோது ஜப்பான் அரசாங்கத்தால் மலேசிய அரசாங்கத்திற்கு 207 பில்லியன் ரிங்கிட் வழங்கியது என்பதை எடுத்துக்காட்டும் அறிக்கையின் மீது தணிக்கை செய்ய முடியுமா என்று தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்திடம் கேட்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

“இது பெரிய தொகை. இது உண்மையாக இருந்தால், பணத்திற்கு என்ன ஆனது? என்று ராயர் நேற்று மக்களவையில் கேள்வியெழுப்பினார்.

2013 ஆம் ஆண்டில், கோலாலம்பூரில் உள்ள ஜப்பானிய தூதரகம், மரண ரயில்வே நிர்மாணிப்பின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 207 பில்லியன் ரிங்கிட் மலேசிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், ஜப்பானிய தூதரகத்தின் அறிக்கை அதே ஆண்டு வெளியான ஹரக்கா டெய்லி கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக, “மலேசிய அரசாங்கத்திற்கு பெரும் இழப்பீடு வழங்குவதை தூதரகம் உறுதிப்படுத்துகிறது” என்று வெளியிட்டிருந்தது ஒன்றுக்கொன்று முரணானதாக உள்ளது என்கிறார் ராயர்.

இதற்கிடையில், நேற்று நடந்த தேசிய கணக்காய்வாளர் அறிக்கை 2021 மீதான தனது விவாதத்தின் போது, முன்னாள் பிரதமரான் டாக்டர் மகாதீர் அரசாங்கத்தை பல்வேறு வழிகளில் தாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாராயின் டாக்டர் மகாதீரின் “துன்” பட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஜெலுதோங் எம்.பி அரசாங்கத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here