பகாங்கில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
விசாரணையின் போது, குறித்த சந்தேக நபருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கண்டறிந்த எமது அதிகாரிகள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், எனினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்துள்ளார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டான்ஸ்ரீ ஆசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் போலீசாருக்கு MACC முழு ஒத்துழைப்பை அளிக்கும் என அவர் உறுதியளித்தார். மேலும் போலீஸ் விசாரணையை எளிதாக்குவதற்காக அனைத்து கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் MACC ஒப்படைத்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பகாங்கின் ரவூப் என்ற இடத்தில் சுமார் 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர்கள் உட்பட மூன்று நபர்கள் MACC ஆல் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட ஆடவர் உட்பட மூவர், நேற்று மாலை 6.30 மணியளவில் பஹாங்கின் பெந்தோங்கில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.









