ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, பாலர் பள்ளிகளில் தற்போது 80 விழுக்காடாக உள்ள மாணவர் சேர்க்கையை 90 விழுக்காடாக உயர்த்த கல்வி அமைச்சகம் இலக்கு கொண்டுள்ளது.
அந்த இலக்கை அடைவதற்காக, அமைச்சு மேலும் பாலர் பள்ளிகளைத் திறக்கும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு ஊக்குவிப்பதற்காக ஒரு விளம்பரப் பிரச்சாரத்தை நடத்தும் என்றும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
“ஆரம்ப பள்ளி மாணவர் சேர்க்கை 98 விழுக்காடாக இருக்கும் அதேநேரம், மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை 78 விழுக்காடாக உள்ளது.
“எனவே, எங்களிடம் இரண்டு பிரிவு மாணவர்கள் உள்ளனர், அவர்களின் சேர்க்கைக்கு நாங்கள் கவனம் செலுத்த வேண்டும், அதாவது பாலர் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி,” என்று அவர் நேற்று இரவு இங்கு நடந்த Sesi Motivasi bersama Cikgu Menteri நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.