வேலை மோசடியில் ஏமாந்த இருவர் கற்றுக்கொண்ட பாடம்

சிங்கப்பூரில் வேலை கிடைக்கும் என நினைத்து, திரு கே.விஷ்ணுவும் திரு பி.கோபியும் மலேசியாவில் தங்கள் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்டனர். அப்போது அவர்களது கையில் 200 ரிங்கிட்டுக்கும் குறைவான பணமே இருந்தது.

வேலை மோசடியில் தாங்கள் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்ததும் இவர்களது கனவு தவிடுபொடியானது. இப்போது ஜோகூர் பாருவில் பாதுகாவலர்களாக இவர்கள் வேலை செய்கின்றனர்.

வேலை வாய்ப்பு விளம்பரம் ஒன்றை சமூக ஊடகத்தில் தாமும் தம் நண்பரும் கண்டதாக திரு விஷ்ணு கூறினார். அதில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணில் அவர்கள் தொடர்புகொண்டனர்.

“தம்மை முகவர் என்று கூறிக்கொண்ட ஆடவர் ஒருவர், சிங்கப்பூரில் வேலை தேடித் தருவதாக எங்களிடம் கூறினார். சிங்கப்பூரின் ஹோட்டல் துறையில் மாதம் $1,700 சம்பளத்துடன் எங்களுக்காக வேலைகள் காத்து இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“நேர்முகத் தேர்வுக்காக எங்களை ஜோகூர் பாருவுக்கு அவர் வரச் சொன்னார்,” என்று கூறிய திரு விஷ்ணு, ஏப்ரல் இறுதியில் தங்கள் சொந்த ஊரைவிட்டுப் புறப்பட்டதாகச் சொன்னார்.

“நிர்வாகக் கட்டணமாக 300 ரிங்கிட் செலுத்துமாறு எங்களிடம் அந்த ‘முகவர்’ கேட்டுக்கொண்டார். ஆனால், அவரை நேரடியாகச் சந்தித்த பிறகு பணம் செலுத்துவதாக நான் அவரிடம் சொன்னேன்,” என்றார் திரு விஷ்ணு.

திரு விஷ்ணு, 23, நெகிரி செம்பிலானையும் திரு கோபி, 22, சிலாங்கூரையும் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக அந்த ஆடவர் உத்தரவாதம் அளித்ததால், ஜோகூர் பாருவுக்கு அவர்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.

லார்கின் சென்ட்ரல் பேருந்து முனையத்துக்கு அவர்கள் வந்துசேர்ந்ததும், அந்த ‘முகவரை’ தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

“ஒரு கட்டத்தில், வேறொருவரிடம் இருந்து நான் கைப்பேசியை வாங்கி அந்த ‘முகவரை’ தொடர்புகொண்டேன். நான்தான் அழைக்கிறேன் என்பதை அறிந்தவுடன் அவர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்,” என்றார் திரு விஷ்ணு.

இதுகுறித்து அவர்கள் இன்னும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.

பணம் இல்லாததால் பேருந்து முனையத்தின் தாழ்வாரத்தில் இரு நாள்கள் தங்கும் நிலைக்கு இருவரும் தள்ளப்பட்டனர். மூன்றாம் நாள் அவர்களிடம் சாப்பிடுவதற்கும் பணம் இல்லை.

“நல்ல வேளையாக, எங்களுக்கு உதவக்கூடிய அரசு சார்பற்ற அமைப்பை நாங்கள் கண்டறிந்தோம்,” என்றார் திரு விஷ்ணு.

தவறுகளில் இருந்து தாங்கள் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், சமூக ஊடகத்தில் இதுபோன்ற விளம்பரங்களைக் கண்டால் கவனத்துடன் இருக்கும்படி மற்றவர்களிடம் வலியுறுத்தினார்.

வீடு இல்லாதவர்களுக்கான தற்காலிக வசிப்பிடத்தில் சேர விஷ்ணு, கோபி இருவருக்கும் தமது அமைப்பு உதவியதாக ‘யாயாசான் கெபாஜிகான் சூரியா ஜோகூர் பாரு’ நிறுவனர் ஜேம்ஸ் ஹோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here