இன்று ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய அன்பர்களுக்கும் மக்கள் ஓசையின் வாழ்த்துக்கள்

இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய வாழ் முஸ்லிம் அன்பர்கள் அனைவருக்கும் மக்கள் ஓசை தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

தியாகத் திருநாள் ( அரபு: عيد الأضحى ) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாக உள்ள ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றுவது என்பது, புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காகப் பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இந்தப் பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலி கொடுக்கப்படுகிறது.

இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்றாஹீம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.

இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார். இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, ஜிப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்குப் பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார்.

மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, தியாகத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, இந்த பண்டிகையைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here