அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கும் ஒரு முயற்சியாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பு மக்களையும் வறிய ஏழைகளையும் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக ஒற்றுமை அரசாங்கம் பாயோங் ரஹ்மா (Payung Rahmah) கோட்பாட்டை அறிமுகம் செய்தது.
* மெனு ரஹ்மா திட்டத்தின் கீழ் 5 ரிங்கிட் கட்டண விலையில் மதிய உணவையும் இரவு உணவையும் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
* ஜுவாலான் ரஹ்மா எனும் ரஹ்மா விற்பனைத் திட்டத்தின் கீழ் சந்தை விலையைக் காட்டிலும் 30 விழுக்காடு மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
* பக்குல் ரஹ்மா உதவி: ரஹ்மா உணவுக்கூடை திட்டத்தின் கீழ் அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அல்லது அவற்றை வாங்கிக் கொள்வதற்கு ஒவ்வொரு மாதமும் 100 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச்சீட்டு (வவுச்சர்) வழங்கப்படுகிறது. வறிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தலைவர்களுக்கு சுமார் 6 மாத காலத்திற்கு இந்த உதவிகள் வழங்கப்படும்.
* ரஹ்மா மெனு திட்டம் யாருக்காக? – குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற, புறநகர் ஏழை மக்களுக்கானதாகும். அதே சமயம் இவ்விரு பகுதிகளிலும் வாழும் வறிய ஏழைகளுக்கும் கரம் கொடுப்பதற்கான இலக்கையும் அது கொண்டிருக்கிறது.
ஒற்றுமை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் ஏழைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது.
ஏழைகளின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதில் உதவுவதற்காக ஒற்றுமை அரசாங்கம் 2023 வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய தொகையை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
மக்கள் குறிப்பாக பி40 பிரிவைச் சேர்ந்தவர்களும் வறிய ஏழைகளும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பாயுங் ரஹ்மா திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.
பி40 பிரிவு மக்கள், வறிய ஏழைகள் நலனில் அக்கறையும் பரிவும் கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஒற்றுமை அரசாங்கம் மெனு ரஹ்மா, ஜுவாலான் ரஹ்மா, பக்குல் ரஹ்மா ஆகிய உதவித் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த நலத் திட்டங்களானது பி40 பிரிவு மக்களுக்கும் வறிய ஏழைகளுக்கும் அவர்களின் வாழ்க்கைச் செலவு சுமைகளைக் குறைப்பதற்கு அல்லது அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கின்றன.
இந்த நலத் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பயன் பெறுவதற்கும் தகுதி பெற்றிருப்பவர்கள் இன்னமும் இவற்றைப் பெறாத பட்சத்தில் உடனடியாக இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் மிகவும் எளிதானது. இதில் அலைக்கழிப்பு எதுவும் இல்லை. தேவையற்ற கேள்விகளும் இல்லை. நட்புறவான முறையில் இந்த மனுக்கள் பூர்த்தி செய்து தரப்படுகின்றன. தகுதிபெறுவோருக்கு விரைவாக இந்த உதவிகள் கிடைக்கின்றன.
இதனை ஒற்றுமை அரசாங்கம் மிகச்சரியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மெனு ரஹ்மா, ஜுவாலான் ரஹ்மா நாடு முழுமையும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன . மக்களுக்கு மிகவும் எளிதான முறையில் இவை கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றன.
மக்களுக்கு குறிப்பாக பி40 வருமானப் பிரிவினருக்கும் வறிய ஏழைகளுக்கும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளின் சுமையைக் குறைக்கும் மிக உன்னதமான நோக்கத்தோடு ஒற்றுமை அரசாங்கம் பாயுங் ரஹ்மா திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மக்கள் மீது கொண்டிருக்கும் அதீத அக்கறையாலும் பரிவினாலும் இத்திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு மிகப்பெரிய வரவேற்புடன் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்தத் திட்டங்களில் பங்கேற்காதவர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற – சட்டமன்ற சேவை மையங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
நாட்டுக்கும் மக்களுக்கும்
உதவும் திட்டத்தில் பங்கேற்பதில் பெருமை
பி40 பிரிவு மக்கள், வறிய ஏழைகள் ஆகியோரின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந்த பாயோங் ரஹ்மா திட்டத்தில் பங்கேற்று மேலும் தாங்களும் ஓர் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம் என்று இதன் வியூகப் பங்காளிகள் மகிழ்கின்றனர்.
ஏழைகளுக்கு உதவுவது என்பது இறைச் சேவைக்கு ஈடானதாகும். 10 ரிங்கிட் விலையிலான ஒரு பொருளை 5 ரிங்கிட்டிற்கு இவர்களுக்கு வழங்குவதால் மிகப்பெரிய இழப்பு என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது மறுக்கவும் முடியாது. ஆனால் ஏழைகளுக்கு நாங்களும் உதவுகிறோம் என்பதில் ஓர் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்கிறார்கள். பாயோங் ரஹ்மா திட்டத்தில் பங்கேற்றிருப்பதன் மூலம் இதனை ஆத்மார்த்தமாக உணர்ந்திருப்பதாகவும் இந்த வியூகப் பங்காளிகள் குறிப்பிடுகின்றனர்.
கே கே சுப்பர் மார்ட்
கே கே சுப்பர் மார்ட்டில் பல்வகையான பொருட்களை கழிவு விலையில் வாங்குவதன் மூலம் மக்கள் அவர்களின் வாழ்க்கைச் செலவு சுமைகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.
தன்னுடைய சமூக பொறுப்புடைமைத் திட்டத்தின் கீழ் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் வறிய ஏழ்மை மக்களுக்கும் பக்கோல் ரஹ்மா திட்டத்தின் கீழ் கே கே சுப்பர் மார்ட் உணவுக் கூடைகளை வழங்குகிறது.
ஜுவாலான் ரஹ்மா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கே கே சுப்பர் மார்ட் வாடிக்கையாளர்கள் கழிவு விலையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
ஜுவாலான் ரஹ்மா திட்டத்தின் வியூகப் பங்காளியாக கே கே சுப்பர் மார்ட் இடம்பெற்றுள்ளது. இதன் தோற்றுநர் டத்தோஸ்ரீ டாக்டர் கே கே சாய் இந்த ஆண்டில் பிப்ரவரி 22ஆம் தேதி டிபிஎஸ் 3 எனப்படும் தெற்கு ஒருங்கிணைக்கப்பட்ட டெர்மினலில் உள்ள கே கே சுப்பர் மார்ட்டில் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் தலைமையில் ரஹ்மா பாயோங் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜுவாலான் ரஹ்மா பிரிவில் நூற்றுக்கும் அதிகமான உணவு வகைகள் ஒவ்வொரு மாதமும் சிறப்புக் கழிவு விற்பனையில் விற்கப்படுகின்றன.
பிரெஸ்மா
மெனு ரஹ்மா வியூகப் பங்காளிகளுள் ஒன்றாக பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்றிருக்கிறது. இந்த மெனு ரஹ்மா திட்டம் குறித்து அதன் தேசியத் தலைவர் டத்தோ ஜவஹர் அலி குறிப்பிடும்போது நாட்டிற்கும் மக்களுக்கும் செய்யும் ஓர் உன்னத உதவியாக நாங்கள் இதனைக் கருதுகிறோம் என்றார்.
சங்கத்தின் பல உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். தம்முடைய அலி மாஜு உணவகங்கள் அனைத்தும் இத்திட்டத்தில் பங்கேற்றிருக்கின்றன. இத்திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் லாபம் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏழைகளின் பணச் சுமையைக் குறைப்பதில் ஓர் அங்கமாக நாங்கள் இருக்கிறோம் என்பதே ஒரு மிகப்பெரிய கௌரவமாகவும் பெருமையாகவும் கருதுகிறோம் .
இத்திட்டத்தின் கீழ் விற்கப்படும் அல்லது வழங்கப்படும் உணவுகள் தரத்தில் எவ்வகையிலும் குறைந்து விடவில்லை. 10 அல்லது 12 ரிங்கிட்டிற்கு என்ன தரத்தில் உணவு விற்கப்படுகிறதோ அதே தரத்தில்தான் மெனு ரஹ்மா திட்டத்தின் கீழ் 5 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. ஏழைகளின் பசியைப் போக்குவதால் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை. லாபம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. இதனை ஒரு மிகப்பெரிய புண்ணியமாகவே கருதி தொடர்ந்து மெனு ரஹ்மா திட்டத்தில் பங்கேற்று வருகிறோம் என்று டத்தோ ஜவஹர் அலி குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மலேசிய உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப்புடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பிறகு அரசாங்கத்திற்கு கைகொடுக்கும் வகையில் பிரெஸ்மா மெனு ரஹ்மா திட்டத்தில் பங்கேற்றது.
இந்த மெனு ரஹ்மா திட்டத்தில் உணவுகள் வாங்க வருபவர்களைப் பார்க்கும்போது சமுதாயத்தின் அனைத்து இனங்களிலும் ஏழைகள் இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. 10 அல்லது 12 ரிங்கிட் மதிப்பிலான உணவு வகைகள் 5 ரிங்கிட்டிற்கு வாங்கும்போது அவர்கள் முகத்தில் வெளிப்படும் ஓர் ஒளி இறைவனின் ஆசியாகவே எங்கள் கண்களுக்குத் தெரிகிறது.
தேவைகள் இருப்பதால்தான் இவர்கள் நம்மை நாடி வருகிறார்கள். இவர்களுக்கு உணவளிப்பதை இறைவனுக்குச் செய்யும் ஒரு தொண்டாகவே நாங்கள் கருதுகிறோம் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் தூரநோக்குச் சிந்தனையில் உதயமாகி இருக்கும் இந்த மெனு ரஹ்மா திட்டம் ஏழைகளுக்கு மிகப்பெரிய அளவில் நிதிச்சுமையைக் குறைப்பதில் உதவுகிறது.
ஒற்றுமை அரசாங்கத்தின் இந்த மக்கள் நலன் சார்ந்த உதவித் திட்டங்கள் ஏழை மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்திருக்கிறது. அரசாங்கத்துடன் கரங்களை இணைத்து நாட்டிற்கும் மக்களுக்கும் உதவுவதில் பிரெஸ்மா என்றும் பக்கபலமாக இருக்கும் என்று டத்தோ ஜவஹர் அலி மனமகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 10 அல்லது 12 ரிங்கிட் மதிப்பிலான உணவு ஒரே தரத்தில்தான் வழங்கப்படுகிறது என்பதை அதனை வாங்கும் பி40 தரப்பு மக்களும், வறிய ஏழைகளும் மனமகிழ்ந்து ஒவ்வொரு முறையும் வாழ்த்திச் செல்கின்றனர்.
5 ரிங்கிட்டிற்கு என்ன கிடைக்கும்? என்ற நினைப்பில் செல்வோருக்கு ஆச்சரியம் தரும் வகையில் 10 அல்லது 12 ரிங்கிட்டிற்கு எவ்வகையான உணவு கிடைக்குமோ அதே உணவு 5 ரிங்கிட்டிற்குக் கிடைக்கிறது.
எங்கள் வலியை உணர்ந்து சரியான நிவாரணத்தைத் தந்திருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி என்று பி40 தரப்பு மக்களும் வறிய ஏழைகளும் கூறுகின்றனர்.