இளைஞர் பலத்தை மஇகா இழக்கிறதா?

பி.ஆர். ராஜன் 

கோலாலம்பூர், ஜூலை 3-

கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட மஇகா பல்வேறு இடர்களையும் தடைகளையும் சுறாவளிகளையும் கடந்து இன்றளவும் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சமுதாயத்தின் அமோக ஆதரவுடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் தெளிந்த நீரோடைபோன்று இக்கட்சி பயணித்து வந்தது.

2008ஆம்  ஆண்டு தொடங்கி அடுத்தடுத்து நடைபெற்ற நாட்டின் பொதுத்தேர்தல்களில் தொடர் தோல்விகளைத் தழுவி ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் புத்தெழுச்சி பெறும் வகையில் புதிய தலைமைத்துவ மாற்றத்துடன் ஒரு புதிய பாதையில் பயணிக்கும் நம்பிக்கையைத் தந்தது. 

இருப்பினும் உட்பூசல்களும் தலைவர்களுக்கு இடையிலான மனமாச்சரியங்களும் அண்மைக் காலமாக இக்கட்சியில் மீண்டும் ஒரு சுனாமியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இளைஞர் பிரிவைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் அண்மையில் விலகி இருக்கின்ற நிலையில் இந்த உட்பூசல் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது.

இந்த இரண்டு பேர் விலகலால் கட்சியில் சுனாமியும் இல்லை உட்பூசலும் இல்லை என்று மார்தட்டினாலும் நெருப்பின்றி புகையாது என்பது எழுதப்பட்ட நியதி. அவ்வகையில் மஇகா இளைஞர் பகுதித் தலைவராக இருந்து படிப்படியாக முன்னேறி கட்சியின் தேசிய உதவித் தலைவர் வரையில் 20 ஆண்டுகள் பாடாற்றி இருக்கும் செனட்டர்  டத்தோ சிவராஜ் சந்திரன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார்.

சிவராஜைப் பொறுத்தவரை பொதுத்தேர்தல் என்பது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேமரன்மலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் ஊழல் இருந்ததாகச் சொல்லி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் அவர் தோல்வியும் கண்டு தொகுதியைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில்  மஇகாவிடம் இருந்து அத்தொகுதி அபகரிக்கப்பட்டு அம்னோ களம் இறங்கியது.

டத்தோ ரம்லி பின் டத்தோ முகமட் நோர் தேசிய முன்னணி வேட்பாளராக அங்கு நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இப்போது நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக இருக்கிறார். 

தீர்ப்பை எதிர்த்து  சிவராஜ் மேல் முறையீடு செய்ய அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். ஆனால் கேமரன்மலையில் வாய்ப்பை இழந்த நிலையில் அவர் தொடர்ந்து கட்சியில்  பாடாற்றி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத்தேர்தலில் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டு தொகுதியில் சேவையாற்றத் தொடங்கினார்.

இருப்பினும் வாக்களிப்பு நாள் நெருக்கத்தில் அத்தொகுதியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சியின் எம். கருப்பையா காலமானார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து மத்தியில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில் அந்தத் தொகுதி தங்களுக்கு வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக்கொள்ள மீண்டும் வாய்ப்பை இழந்தார் சிவராஜ்.

அத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோ அஸ்மான் நஸ்ருடின் 16,260 வாக்குகள் பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் முகமட் சோஃபி ரசாக்கைத் தோற்கடித்தார்.  இந்தத் தொகுதியை விட்டுக் கொடுப்பதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மஇகாவுடன் என்ன பேரம் பேசியது என்பது தெரியவில்லை.

இருப்பினும் அண்மையில் டத்தோ சிவராஜ்  நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டர்) நியமனம் செய்யப்பட்டார்.  

தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமனம் செய்த மித்ரா சிறப்புப் பணிக் குழுவில் அவர் இடம்பெற்றார். மஇகா மத்திய செயலவை உறுப்பினராக இருந்த அவர், அப்பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தேசியத் தலைவர் அறிவித்தார்.

கடந்த வாரம் அவர் திடீரென மஇகாவின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காரணங்கள் எதையும் அவர் சொல்லவில்லை. ஆனால் எந்தவித இடையூறும் தடங்கலும் இன்றி மக்கள் பணி செய்வதற்குத் தாம் விரும்புவதாக மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

புனிதன் விலகல்

இதனிடையே, மஇகா சிலாங்கூர் மாநில இளைஞர் பகுதித் தலைவர் பி. புனிதன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இவரும் காரணம் தெரிவிக்கவில்லை. ஆனால்  வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ஈஜோக் தொகுதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த சில  ஆண்டுகளாகவே களப்பணி ஆற்றி வந்த நிலையில் மஇகா மத்திய செயலவை அண்மைய அவசரக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை மஇகா இன்னும் முடிவு செய்யவில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார்.

கட்சியில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உழைத்திருக்கும் இளைஞர்களுக்கு முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது நீண்ட காலமாகவே இருந்து வரும்  ஒரு மனக்குறையாகும். மேலும் தங்களுக்கு சுதந்திரமான பேச்சுரிமை இல்லை என்பதும் இளைஞர்களுடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

பிகேஆர், அம்னோ, ஜசெக, பெர்சத்து, பாஸ், கெராக்கான், அமானா, புதிதாக உதயமாகி இருக்கும் மூடா ஆகிய கட்சிகளில் இளைஞர்களின் குரலுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்படுகிறது. அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படுகிறது. கருத்துகளைச் சொல்வதற்கு முழு சுதந்திரமும் உள்ளது. ஆனால் மஇகாவில் அந்த நிலை இல்லை என்பது வேதனைக்குரியது என்று நம்பத்தகுந்த இளைஞர் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

விரைவில் மேலும் பல இளைஞர் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகக்கூடிய சாத்தியம் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here