சிரம்பான், ஜூலை 6-
அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநிலத்தை நம்பிக்கைக் கூட்டணி தொடர்ந்து தற்காக்குமா அல்லது அம்மாநில அரசு பெரிக்காத்தான் நேஷனல் வசமாகுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
நெகிரி ஙெ்ம்பிலான் மாநிலத்தில் மொத்தமாக 36 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி 20 தொகுதிகளை வென்றெடுத்த நிலையில் தேசிய முன்னணி 16 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனை அடுத்து தேசிய முன்னணி வசம் இருந்த அந்த மாநிலம் நம்பிக்கைக் கூட்டணி வசமானது.
அந்தத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் ஜசெக கட்சி 11 தொகுதிகளில் போட்டியிட்டு அவை அனைத்திலும் வெற்றிபெற்றது. அதேசமயம் 12 தொகுதிகளில் போட்டியிட்ட கெஅடிலான் கட்சி 6 தொகுதிகளை மட்டுமே வென்றெடுத்தது.
7 தொகுதிகளில் போட்டியிட்ட அமானா கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. அச்சமயத்தில் நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெர்சத்து கட்சி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால் அக்கட்சி வேட்பாளர்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. அதேசமயம் தேசிய முன்னணியின் கீழ் 22 தொகுதிகளில் போட்டியிட்ட அம்னோவினர் 15 தொகுதிகளை வென்றெடுத்தனர். மஇகா 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் நெகிரி செம்பிலான் மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இல. மாணிக்கம் வெற்றிபெற்றிருந்தார்.
அத்தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட மசீச ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. அதேபோல் தேசிய முன்னணியின் கீழ் களமிறங்கிய கெராக்கான் வேட்பாளர்கள் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அவர்கள் தோல்விகண்டனர். 2018ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஸ் கட்சி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. அதில் ஒரு தொகுதியில்கூட அக்கட்சி வெற்றிபெறவில்லை.
தேர்தலில் வெற்றிபெற்று நெகிரி செம்பிலான் மாநிலத்தைத் தம் வசமாக்கிய நம்பிக்கைக் கூட்டணி சார்பாக டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மாநில மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றார். அவரின் தலைமையின் கீழ் 2 இந்தியர்கள் ஆட்சிக்குழுவில் இடம்பெற்றனர்.
நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் (ஜஙெ்க), மாநில மனிதவள, தோட்டப்புற இஸ்லாம் அல்லாதார் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினராகவும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் (ஜஙெ்க) சுகாதார, சுற்றுச்சுழல், கூட்டுறவுக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றனர்.
அதேநேரம் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ எம்.ரவி மாநில துணை சபாநாயகராகப் பொறுப்பேற்றிருந்தார். 2018ஆம் ஆண்டு தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் 5 இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி வகித்தனர். அவர்களுள் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் பழனிசாமியும் அடங்குவார்.
நெகிரி செம்பிலான் மாநிலமானது அதிக அளவில் இந்திய வாக்காளர்களைக் கொண்டுள்ள மாநிலமாகும். கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் தரவின்படி இம்மாநிலத்தில் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் இந்திய
வாக்காளர்களின் எண்ணிக்கை 31.02 விழுக்காடாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து ரந்தாவில் 27.01 விழுக்காடு, சுவாவில் 22.54 விழுக்காடு, லுக்குட்டில் 24.24 விழுக்காடு, பாகான் பினாங்கில் 14.19 விழுக்காடு, லிங்கியில் 18.21 விழுக்காடு, கெமிஞ்சேயில் 15.44 விழுக்காடு, ரெப்பாவில் 16.6 விழுக்காடு, லோபாக்கில் 19.78 விழுக்காடு, நீலாயில் 21.85 விழுக்காடு, தெமியாங்கில் 14.26 விழுக்காடு, லாபுவில் 15.23 விழுக்காடு, புக்கிட் கெப்பாயாங்கில் 20.75 விழுக்காடு, பாரோயில் 15.65 விழுக்காடு, சிரம்பான் ஜெயாவில் 24.08 விழுக்காடு, ஜெராம் பாடாங்கில் 35.74 விழுக்காடு, ரஹாங்கில் 20.70 விழுக்காடு, மம்பாவில் 23.22 விழுக்காடு என இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்டிருந்தது.
அந்த எண்ணிக்கை தற்போது ஒருசில இடங்களில் கூடியிருக்கலாம் எனவும் சில இடங்களில் குறைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்தச் சுழலில் 15ஆவது பொதுத்தேர்தலில் நாடு தழுவிய அளவில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பெரும் ஆதரவு அலை வீசியது.
ஆனாலும் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி (அம்னோ) 5 தொகுதிகளில் வென்றது. நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் போட்டியிட்ட ஜசெக 2 தொகுதிகளிலும் கெஅடிலான் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.
பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட பெர்சத்து, பாஸ் ஆகிய கட்சிகள் எந்தத் தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை. இருப்பினும் தற்போது நாளுக்கு நாள் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு பெருகிவருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மலாய்க்காரர்கள் மத்தியில் பெரிக்காத்தான் நேஷனல் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து பெற்றுவருவதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் மாநில ஆட்சி முறையில் நம்பிக்கைக் கூட்டணியும் பெருவாரியான மக்களைக் கவர்ந்திருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ளனர். எனவே இந்தத் தேர்தலில் தேசிய முன்னணி – நம்பிக்கைக் கூட்டணி இணைந்து ஓரணியில் போட்டியிட களம் இறங்க உள்ள நிலையில் வாக்காளர்களுள் ஆதரவு எந்தப் பக்கம் திரும்பும் என்பதைக் கணிக்க முடியவில்லை எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் இதுவரை உறுதிபடக் கூறமுடியவில்லை. இதற்கிடையே இம்மாநிலத்தில் இந்தியர்களின் ஆதரவு யாருக்கு என்பதும் இதுவரை அறுதியிட்டுக்கூற முடியவில்லை.
அதிலும் கடந்த முறை வெற்றிபெற்ற இந்திய வேட்பாளர்களுக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை தேசிய முன்னணி – நம்பிக்கைக் கூட்டணி வெற்றிபெற்றால் ஆட்சிக்குழுவில் எத்தனை இந்தியர்கள் (வெற்றிபெற்றவர்கள்) இடம்பெறுவார்கள் என்பதும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இம்முறை இந்திய வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனப் பரவலாகப் பேசப்படும் வேளையில் நெகிரி செம்பிலானில் எத்தனை இந்திய வேட்பாளர்கள் அக்கூட்டணி சார்பில் போட்டியிடுவார்கள் என்பதும் தெரியவில்லை.
வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று இக்கேள்விகளுக்கு ஏறத்தாழ பதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















