புத்ராஜெயா, ஜூலை 10-
2,000 தமிழர்கள் பங்கேற்பர்
தமிழ்மொழியின் தொன்மை, தனித்துவம் போன்றவற்றையும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒருங்கிணைத்து உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்கு 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூரில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் தலைவராக மனிதவள அமைச்சர் வ.சிவகுமார், இணைத் தலைவராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகிய இருவரையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமனம் செய்திருக்கிறார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள துங்கு வேந்தர் மண்டபத்தில் நடைபெறும்.
மலேசியா ஏற்கெனவே 3 முறை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தியிருக்கிறது. இந்த மூன்று மாநாடுகளும் மலேசிய அரசாங்கத்தின் முழு ஆதரவுடன் நடைபெற்றன. இம்முறை நடைபெறும் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒரு புதிய வரலாற்றை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், ஓம்ஸ் அறவாரியம் ஆகியவற்றின் ஆதரவோடு மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து 2,000 தமிழறிஞர்களும் 1,000 பார்வையாளர்களும் கலந்து கொள்வர்.
வரும் ஜூலை 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.