இந்த மாத தொடக்கத்தில் மூதாட்டி ஒருவரிடம் தங்க வளையலை கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட, விவசாயி ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு பிரம்படியும் விதித்து, கோத்தா திங்கி அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
37 வயதான நஸ்ரி முகமட் மொக்தார், என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிபதி ஹைதா ஃபரிசல் அபு ஹசன் முன்நிலையில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.
குற்றப்பத்திரிகையின் படி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு குழந்தைகளின் தந்தை, 60 வயதுள்ள மூதாட்டி ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்தி, அவரது தங்க வளையலைக் கொள்ளையடித்துள்ளார். இச்சம்பவம் ஜூலை 2 ஆம் தேதி மதியம் 12.40 மணியளவில் ஃபெல்டா ஆயிர் தாவார் 4 இல் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாக கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்கு மூன்று முதல் ஒன்பது வயது வரையிலான நான்கு குழந்தைகள் இருப்பதாலும், பெற்றோரை கவனித்துக்கொள்வதோடு, மாதாந்திரம் RM1,500 மட்டுமே சம்பாதிப்பதாகவும், தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் கோரினார்.
இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கைது செய்யப்பட்ட நாளிலிருந்து எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு சவுக்கடி தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.