தைவானில் பட்டப்பகலில் பெண்ணை தாக்கிய ஆடவர் கைது

தைப்பே:

பட்டப்பகலில் தாக்குதல்காரனிடம் இருந்து பெண் ஒருவர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் தைவானில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டது.

வழிப்போக்கர்கள் நால்வர் குறுக்கிட்டு, அந்த ஆடவரை சூழ்ந்து தாக்கியதைத் தொடர்ந்து அந்த மாது உயிர்தப்பினார். தென்கிழக்கு தைவானில் கரையோர நகரான தாய்துங்கில் நண்பகல்வாக்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அட்டைப்பெட்டியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை வைத்திருந்த அந்த ஆடவர், சாலையைக் கடந்துகொண்டிருந்த பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து அவரைத் தாக்கினார்.

போக்குவரத்து விளக்கு சிவப்பில் இருந்ததால் சாலைச் சந்திப்பில் காரை நிறுத்திய சூ என்பவர், அந்த மாது தாக்கப்படுவதைக் கண்டார். சூவுடன் அவரின் இரு மகன்களும் காரில் இருந்தனர்.

அந்தப் பெண்ணை தாம் காப்பாற்றவில்லை என்றால் அவர் கொல்லப்பட்டுவிடுவார் என்பதை சூ உணர்ந்தார்.

காரில் இருந்த சூப் அகப்பையை எடுத்துக்கொண்டு காரிலிருந்து சூ இறங்கினார். அருகில் இருந்த கடையிலிருந்து மேசை மின்விசிறியையை அந்த மாதின் பயணப்பெட்டியையும் சூவின் மகன்கள் கையில் எடுத்தனர். அந்த பெண்ணிடமிருந்து அந்தத் தாக்குதல்காரனின் கவனத்தை அவர்கள் திசைதிருப்பியதாக யுனைடெட் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

நீல நிறச் சட்டை அணிந்திருந்த அந்தத் தாக்குதல்காரனை அந்த மூன்று ஆடவர்களும் சூழ்ந்திருப்பதைக் கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளி காட்டியது.

சாங் என்று பெயர் கொண்ட அந்தத் தாக்குதல்காரனுக்குப் பின்னால் இருந்த சூ, அகப்பையைக் கொண்டு அவனின் கையைத் தாக்கியதில் அவன் வைத்திருந்த கத்தி தரையில் விழுந்தது.

அங்கிருந்த வேறொரு வழிப்போக்கரின் உதவியோடு, சூவும் அவரின் மகன்களும் சாங்கை மடக்கிப் பிடித்து தரையில் கிடத்தினர்.

சியாங் எனும் அடையாளம் காணப்பட்ட அந்த 26 வயது மாதுக்கு காதுகள், கழுத்து, இடது கை, இடது தொடையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

அந்தத் தாக்குதல்காரன் கைது செய்யப்பட்டதாகவும், சியாங்கின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தாய்துங் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

அந்தத் தாக்குதல்காரனுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் அவனின் உள்நோக்கம் என்ன என்பது பற்றியும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here