சமையல் பொருட்களின் விலை உயர்வு மாதம் 200 ரிங்கிட்டாக இருந்த செலவு தற்போது 500 ரிங்கிட்டைத் தாண்டிவிட்டது.

கோலாலம்பூர், ஜூலை 10-

குடும்ப மாதர்கள் குமுறல்

சமையல் பொருட்களுக்கான விலை அதிகரித்துவருவது குறித்து குடும்ப மாதர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். முன்பு சமையல் பொருட்களுக்கு மாதம் 200 ரிங்கிட செலவானது. ஆனால் இப்போது இச்செலவு 500 ரிங்கிட்டைத் தாண்டிவிட்டதாக அவர்கள் முறையிட்டனர்.

நால்வர் கொண்ட குடும்பத்திற்கான சமையல் பொருட்களுக்கு ஆகும் செலவு இப்போதெல்லாம் 500 ரிங்கிட்டைத் தாண்டிவிட்டது என்று அவர்கள் மனம் குமுறினர். காய்கறி, மீன் உள்ளிட்ட சமையல் பொருட்களின் விலை இப்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜாலான் ஒஸ்மான், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெரிய சந்தையில் கொஸ்மா ஊடகம் நடத்திய ஆய்வில் சமையல் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது தெரியவருகிறது. காய்கறிகள், மீன், கோழி போன்றவற்றின் விலை உயர்ந்துவிட்டதாகப் பயனீட்டாளர்கள் முறையிட்டனர்.

புதிய சுமை

சமையல் பொருட்களின் விலை அதிகரிப்பு எங்களுக்குப் புதிய சுமையாக அமைந்துவிட்டது என்று அஸிலா ஸைடி என்பவர் சொன்னார். முன்பெல்லாம் வீட்டிற்குத் தேவையான பொருட்களுக்குச் சுமார் 200 ரிங்கிட் செலவாகும். ஆனால் இப்போது அதே பொருட்களுக்கு 500 ரிங்கிட் செலவாகிறது என்று அவர் மேலும் சொன்னார். இந்த விலை உயர்வு எங்களைப் போன்றவர்களுக் குப் புதிய சுமையாக அமைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 

கூடுதல் செலவாகிறது

கோழி போன்ற சமையல் பொருட்களுக்கான விலை அதிகரிப்பால் எங்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது என்று அர்லே ஜேக்கப் என்பவர் தெரிவித்தார்.  

கோழி விலை முன்புபோல் இல்லை. அதன் விலையும் அதிகரித்துவிட்டது. ஒரு கோழி விலை 26 ரிங்கிட்டாக உயர்ந்திருக்கிறது. மாதம் நான்  6 கோழிகள் வரை வாங்குவது உண்டு. இதற்கான செலவு 130 ரிங்கிட்டையும் தாண்டிவிட்டது என்று அவர் மேலும் சொன்னார். மீன் விலையும் முன்புபோல் இல்லை. அதிகமாக இருக்கிறது என்று அவர் முறையிட்டார்.

முன்பு மீன்கள் விலை அதிகமாக இருந்த நிலையில் இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. அதுவும் மீன்களின் வகையைப் பொறுத்து விலை அமைந்திருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதற்கு முன்பு பெலாலிங் மீன் விலையும் கெம்போங் மீன் விலையும் கிலோ 30 ரிங்கிட் வரை உயர்ந்திருந்தது. இப்போது கொஞ்சம் குறைந்து கிலோ 20 ரிங்கிட்டாக உள்ளது என்று அவர் சொன்னார்.

மீன்களைப் பொறுத்தவரையில் இந்த விலையும் அதிகம்தான். ஆனால் என்ன செய்ய முடியும்? வியாபாரிகளின் நிலையையும் பார்க்க வேண்டியுள்ளது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர் சொன்னார்.

காய்கறி விலை உயர்வு

இதற்கிடையே காய்கறிகள் விலையும் உயர்ந்திருக்கிறது என்று இந்தான் காதிர் என்பவர் சொன்னார். குறிப்பாக தக்காளிப்பழம் விலை அதிகமாக இருக்கிறது. நான் பொதுவாகக் காய்கறிகளையும் தக்காளிப்பழங்களையும் அதிகம் வாங்குவதுண்டு.

ஆனால் இவற்றின் விலை முன்புபோல் இல்லை. தற்போது உயர்ந்திருக்கின்றன. முன்பு கிலோவுக்கு 3 ரிங்கிட்டாக இருந்த இவற்றின் விலை தற்போது 5 ரிங்கிட்டிற்கும் மேல் உள்ளது. மிளகாய் விலையும் அப்படிதான். முன்பு கிலோ 3 ரிங்கிட்டாக இருந்தது. ஆனால் இப்போது கிலோ 7 ரிங்கிட் ஆகிவிட்டது என்றும் அவர் முறையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here