கோலாலம்பூர், ஜூலை 18-
மலேசியாவில் நடைபெறும் 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு பேராளர்கள் வழங்கி வரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான வ. சிவகுமார் நேற்றுத் தெரிவித்தார்.
கடந்த வாரம் வரை மாநாட்டிற்கு வருகை தரும் பேராளர்களின் எண்ணிக்கை 700ஆக மட்டுமே இருந்தது. இருப்பினும் இந்த ஒரு வாரத்தில் மேலும் 300 பேராளர்கள் பதிந்து கொண்டிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 21 முதல் 23 வரை 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது. நீண்ட நெடிய வரலாறு, வளமான இலக்கியம் ஆகியவற்றைக் கொண்ட செந்தமிழ் தமிழ்மொழி எதிர்நோக்கும் சவால்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது மலேசியா ஏற்று நடத்தும் 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடாகும் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் 1966, 1987, 2015 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தி இருக்கிறது. இந்த 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஓம்ஸ் அறக்கட்டளை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன. மலேசிய ஒற்றுமை அரசாங்கம் இதற்கு ஆதரவு நல்கி இருக்கிறது.
இந்த மாநாட்டின் இணைத் தலைவராக மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பா, ஹாங்காங், மொரீசியஸ், சிங்கப்பூர், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து 1,000 பேராளர்கள் இதுவரை பதிந்து கொண்டுள்ளனர்.
2,000த்திற்கும் மேற்பட்ட அறிஞர்கள், படைப்பாளர்கள் கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர் என்று குறிப்பிட்ட அவர், ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தும் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகச் சொன்னார். மாநாடு ஏற்பாடு தொடர்பில் நேற்றுக் காலை புத்ரா உலக வாணிப மையத்தில் உள்ள மனிதவள அமைச்சின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குப் பின்னர் சிவகுமார் இத்தகவலைத் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பேராளர்கள் தங்குவதற்கான வசதிகள், போக்குவரத்து, உணவு உட்பட அனைத்தும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழன்னைக்கு மகுடம் சுட்டும் 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்புடன் நடைபெற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முழு ஆதரவு வழங்கி இருக்கிறது.
வரும் ஜூலை 22ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.










