ஏவுகணை ஏற்றுமதி உரிமம் ரத்து: நார்வேயின் ஒருதலைப்பட்ச முடிவிற்குப் பிரதமர் அன்வார் கடும் கண்டனம்!

கோலாலம்பூர், மே 14: மலேசியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ‘நேவல் ஸ்டிரைக்’ ஏவுகணை மற்றும் அதன் ஏவுதள அமைப்புகளுக்கான ஏற்றுமதி உரிமத்தை நார்வே ஒருதலைப்பட்சமாக ரத்து செய்திருப்பதற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட பிரதமர், 2018-ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தத்தின் கீழ் மலேசியா தனது அனைத்து கடப்பாடுகளையும் எவ்வித மீறலுமின்றி நிறைவேற்றி வந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி நார்வே எடுத்துள்ள இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இத்தீர்மானம் மலேசியாவின் தற்காப்புத் தயார்நிலை மற்றும் ‘லிட்டோரல் காம்பாட் ஷிப்’ (LCS) நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், ஐரோப்பிய தற்காப்பு விநியோகிஸ்தர்கள் இது போன்ற ஒப்பந்தங்களில் இருந்து பொறுப்பின்றி விலகுவது அவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவேதான், பிராந்திய பாதுகாப்பு சமநிலையைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here