கோலாலம்பூர் :
பிந்துலுவிலுள்ள மளிகைக் கடைக்கு முன்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, 7 உள்ளூர் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிந்துலு மாவட்ட காவல் தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும், விசாரணைக்கு உதவும் வகையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிந்துலு மாவட்ட காவல் தலைவர் சுப்ரிண்டெண்டன் நிக்சன் ஜோசுவா அலி தெரிவித்தார்.
வாகன விபத்து தொடர்பான கருத்து வேறுபாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும், இதில் எந்தவொரு சண்டைக் கும்பலுடன் தொடர்பும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டதற்காக தண்டனைச் சட்டப் பிரிவு 147-இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு அரசுத் துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், பிந்துலு காவல் கட்டுப்பாட்டு அறையை 086-318804 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
























