எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தனிநபர்கள் உட்பட யாரையும் நான் கொடுமைப்படுத்த மாட்டேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
சிறையில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து தனக்கு தெரியும் என்றும், பிரதமர் என்ற முறையில் தன்னிச்சையாக தான் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த மாட்டேன் என்றும் அன்வார் கூறினார்.
“நான் மற்றவர்கள் மீது கோபம் கொண்டு சர்வாதிகாரமாகவோ தன்னிச்சயாகவோ செயற்பட்டிருந்தால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்திருப்பேன். நான் ஏற்கனவே சிறையில் இருந்திருக்கிறேன், அங்கு இருப்பது எவ்வளவு வலிமிகுந்தது என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் ஒருபோதும் தன்னிச்சையாக முடிவெடுத்து, யாரையும் துன்புறுத்த மாட்டேன். அத்தோடு இந்த நாட்டில் சட்டங்கள் உள்ளன. அவற்றின்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”
“மேலும் PAS அல்லது பெர்சாத்துவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான் அவர்களை ஒடுக்கவோ, கொடுமைப்படுத்தவோ மாட்டேன், ஏனென்றால் சிறையில் வாடுவது எவ்வளவு பரிதாபகரமானது என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கம்போங் ராஜா மூசாவில் நடந்த தஞ்சோங் காராங் யூனிட்டி மாலில் நடந்த ஹிஜ்ரா 1445H கொண்டாட்டத்தில் கூறினார்.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.









