திருடப்பட்டதாக நம்பப்படும் கேபிள்களை லோரியில் ஏற்றிச் சென்ற டெலிகாம் மலேசியா (TM) ஒப்பந்ததாரர்கள் உட்பட ஆறு கேபிள் திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட தலைவர், துணை ஆணையர் முஹமட் ஆசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
31 வயதான புகார்தாரர் ஒருவர் அம்பாங்கின் ஜாலான் AU4 வழியாக பலர் செப்பு கம்பிகளை வெளியே இழுப்பதைக் கண்டு போலீஸ் அதிகாரிகளை அழைத்து, தகவல் தெரிவித்தார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு அழைப்பு வந்த பதின்மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து சந்தேக நபர்களை கைது செய்தது.
“அதில் மூன்று உள்ளூர்வாசிகள் மற்றும் மூன்று பேர் வெளிநாட்டினர், அனைவரும் 18 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள், என்றும், அவர்களில் சிலர் TM ஒப்பந்ததாரர்கள் எனவும் கண்டறியப்பட்டது” என்றும் ACP முஹமட் ஆசாம் கூறினார்.
மேலும் அவர்களில் மூன்று சந்தேக நபர்கள் முந்தைய குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அத்தோடு கேபிள்களை திருட பயன்படுத்திய கருவிகள் மற்றும் லோரி என்பனவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் அறுவரும் வரும் சனிக்கிழமை (ஜூலை 22) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.









