கோலாலம்பூரில் இந்தாண்டு ஜூலை 3 வரை சுமார் 83,000 போக்குவரத்து சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன

இந்தாண்டு ஜூலை 3ஆம் தேதி வரை பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக மொத்தம் 83,152 சம்மன்கள் கோலாலம்பூர் காவல்துறையினரால் வழங்கப்பட்டுள்ளன.

நேற்றைய (ஜூலை 19) நிலவரப்படி, போக்குவரத்து இடையூறுகளுக்காக 65,924 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர், துணை ஆணையர் சரிபுடின் முகமட் சாலே தெரிவித்தார்.

“அதுதவிர பாதசாரிகள் நடைபாதையில் கார்களை நிறுத்துவதற்கு 3,655 சம்மன்கள் மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய உள்ளூர்வாசிகளுக்கு 3,082 சம்மன்களும் விதிக்கப்பட்டது ,” என்று அவர் இன்று வியாழக்கிழமை (ஜூலை 20) தொடர்பு கொண்டபோது கூறினார்.

அத்தோடு போக்குவரத்து விதியை மீறிய 153 மோட்டார் சைக்கிள்கள், 6 கார்கள் மற்றும் ஒரு லோரி என மொத்தம் 160 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக ஏசிபி சரிபுடின் மேலும் தெரிவித்தார்.

“அனைத்து தரப்பினரின் பாதுகாப்பிற்காக சாலை அடையாளங்களை புறக்கணிக்க வேண்டாம் என்று சாலை பயனாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here