அதிகமான பெண்களை பணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையாக மலிவு விலையில் குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வியாழக்கிழமை (ஜூலை 27) தெரிவித்தார். பராமரிப்பு பொருளாதாரத்தின் முன்முயற்சிகளில் ஒன்றாக இதை அறிவித்த அவர், நாட்டில் பதிவு செய்யப்படாத நர்சரிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் RM10 மில்லியனை ஒதுக்கும் என்றும் கூறினார்.
நிதியமைச்சராக இருக்கும் அன்வார், இங்கு நடந்த ‘மடானி பொருளாதாரம்: மக்களுக்கு அதிகாரமளித்தல்’ என்ற திட்டத்தின் தொடக்க விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொழிலாளர் பணியமர்த்தலில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 55.5% குறைவாக இருப்பதாகவும், அண்டைநாட்டு பொருளாதாரத்தின் அடிப்படையில் மலேசியா ஒப்பிடத்தக்கதாக இருக்க 60% உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒப்பீட்டளவில், தொழிலாளர் படையில் ஆண்களின் பங்கு 80.9% உள்ளது என்றும் அவர் கூறினார். தாய்மார்கள் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கவும், தொழிலாளர் சந்தையில் பாலினப் பிளவைக் குறைக்கவும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை அம்சங்களின் அடிப்படையில் முயற்சிகள் மற்றும் ஆதரவு திட்டங்கள் தேவை என்று அன்வார் கூறினார்.