பினாங்கு மாநில தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பிரபல அடிமட்டத் தலைவரான 47 வயதான டேவிட் மார்ஷல் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக DAP இல் இருந்து, 10 முறை கவுன்சிலராக செபெராங் பிறை நகராண்மைக் கழகத்தில் பணியாற்றியவர்.
“தற்போது நகராண்மைக் கழகத்தின் கவுன்சிலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக நான் கடிதம் அனுப்பியுள்ளேன், இந்த மாநில தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவேன். என்னை ஆதரிப்பதாக உறுதியளித்த பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவு எனக்கு உள்ளது”.
மேலும் “கட்சியானது ‘பணக்காரர்களுக்கு’ வாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிகிறது, பல ஆண்டுகளாக சமூகத்திற்காக உழைத்தவர்களுக்கு அல்ல,” என்று மார்ஷல் கூறினார்.
மேலும் முன்னாள் பிறை சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கின் துணை முதலமைச்சருமான டாக்டர் பி. ராமசாமியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகவும் இவர் அறியப்படுகிறார்.









