பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள வணிக கட்டிடத்தின் 29 வது மாடியில் இருந்து விழுந்த ஆடவர், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில், 43 வயதுடைய வெளிநாட்டவரின் சடலம், அந்த இடத்தில் இருந்த பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதின் அப்துல் ஹமிட் கூறினார்.
சம்பவம் குறித்து டாமான்சாரா காவல் நிலைய உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே அதனை ஆய்வு செய்ய காவல்துறையினர் அந்த இடத்திற்குச் சென்றனர் என்றும், அவர்கள் அங்கு சென்றபோது, குறித்த கட்டிடத்தின் ஓரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
“முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் கட்டிடத்தின் 29வது மாடியில் உள்ள உணவகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
“சிசிடிவி கேமராவின் காட்சிகளின் அடிப்படையில், அந்த நபர் மதியம் 2.46 மணியளவில் பால்கனியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுகிறது” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முகமது ஃபக்ருதீனின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (PPUM) கொண்டு செல்லப்பட்டது.
சம்பவத்தை பார்த்தவர்கள் அல்லது சம்பவ இடத்தில் இருந்த நபர்கள், விசாரணை அதிகாரி சார்ஜென்ட் ஃபாடின் அஃபிஃபா ஷாப்ரியை 013-7353589 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.