6 மாநிலங்களின் தேர்தலுக்காக  173 மையங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

6 மாநிலத் தேர்தலுக்காக  173 மையங்களில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அனைத்து வேட்புமனுத் தேர்வு மையங்களும் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய மாநிலத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் காலை 10 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை அனைத்து வேட்புமனு மையங்களிலும் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தனர்

245 மாநில இடங்களைத் தவிர, 15ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் டத்தோ அஹ்மத் அம்சாத் ஹாஷிமின் வெற்றியை ரத்து செய்ய தெரெங்கானு தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட கோல தெரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.  மாநில தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான 14 நாள் பிரசார காலம் தேர்தல் நடத்தும் அதிகாரியால் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தொடங்கி ஆகஸ்டு 11 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.

சிலாங்கூர், கெடா, பினாங்கு, கிளந்தான், தெரெங்கானு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்கும், கோல தெரெங்கானு இடைத்தேர்தலுக்கும், ஆகஸ்ட் 8-ம் தேதி முன்கூட்டியே வாக்கெடுப்பதற்கும் ஆகஸ்ட் 12 ஆம் தேதியை தேர்தல் ஆணையம் (EC) நிர்ணயித்துள்ளது. 6 மாநிலங்கள் பொதுத் தேர்தலிலிருந்து தனித்தனியாகத் தேர்தல் நடத்துவது இதுவே முதல் முறை.

45 இடங்களைக் கொண்ட கிளந்தான் மாநில சட்டமன்றம் ஜூன் 22 அன்று கலைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து 56 இடங்களைக் கொண்ட சிலாங்கூர் மாநில சட்டமன்றம் ஜூன் 23 அன்று கலைக்கப்பட்டது.

40 இடங்கள் கொண்ட பினாங்கு மாநில சட்டமன்றம், 36 இடங்கள் கொண்ட கெடா மாநில சட்டமன்றம் மற்றும் 32 இடங்கள் கொண்ட தெரெங்கானு மாநில சட்டமன்றம் ஜூன் 28 அன்று ஒரே நேரத்தில் கலைக்கப்பட்டன. அதே நேரத்தில் 36 இடங்களைக் கொண்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் ஜூலை 1 ஆம் தேதி மாதம் கலைக்கப்படுவதற்கு முன்பு அதன் முழு ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்தது.

தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, மொத்தம் 9,773,571 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆறு மாநிலத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையில் 3,747,057 பேர் உள்ளனர்; கெடா (1,585,085); கிளந்தான் (1,411,912); பினாங்கு (1,234,198); தெரெங்கானு (930,894); மற்றும் நெகிரி செம்பிலான் (864,425).

இதனிடையே, இன்று காலை பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சிலாங்கூரின் உள்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், நெகிரி செம்பிலானில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here