கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஷா ஆலாம் சுல்தான் சலஹுடின் அப்துல் அசிஸ் ஷா போலிடெக்னிக் (politeknik) கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான நூல் நிலைய மாநாட்டில் கால் பதித்தது பீடோரைச் சேர்ந்த பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி. நீலாம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாயக் கிணறு வழி வாசிப்புத் திட்டத்தை மேம்படுத்தும் முறையை பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் இராஜன் நாயுடு சிறப்பான படைப்பைப் படைத்து அங்கு வருகை புரிந்த அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

பல பிரிவுகளிலிருந்து ஏறக்குறைய 1000 பேர் இந்த 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளைச் சமர்ப்பித்தனர். அதில், இறுதியாக பேசிய மலேசிய நூலகத் தலைவர் கஜாலி அவர்கள் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் படைப்பு மாணவர்களின் திறமையைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் தங்களை ஈர்த்துள்ளதாகவும் கூறினார். அவரது இந்த பாராட்டும் அங்கு ஒலித்த கரகோஷமும் மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமை சேர்த்ததாக நாங்கள் உணர்ந்தோம் என சரவணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நூலகம் கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட அளவில் நனிச்சிறந்த நூலகமாகவும் மாநில அளவில் இரண்டாம் நிலையிலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆசிரியை பாக்கியவதி 2022-ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்த நூலக ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். இப்பள்ளியின் ஆசிரியர்கள் சிறந்த ஆற்றல் உள்ளவர்கள். அத்துடன் அனைத்துலக ரீதியில் பல வெற்றிகள் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

மாநாட்டில் பள்ளியின் நூலக பொறுப்பாசிரியர் இரா.பாக்கியவதி, ஆசிரியைகள் பெ.தீபாஷினி, சா.ரேவதி மற்றும் கி.பார்வதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அண்மையில் மக்கள் ஓசை, பள்ளியின் சாதனை ஆசிரியர் செல்வராணி உத்திரக்குமாரன் தொடர்பிலும் பள்ளியின் அழகிய தோற்றம், சாதனைகள் குறித்தும் முகநூல் பகுதியில் நேரலையாக வெளியிட்டிருந்தது. இந்த பதிவு இன்றுவரை 55,௦௦௦ திற்கு அதிகமானோரை சென்றடைந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








