யானைகள் ஜப்பானுக்கு இடமாற்றம்: அரசுப் பணம் தனிநபர்கள் பாக்கெட்டுக்குச் சென்றதாக SPRM-இல் புகார்!

கோலாலம்பூர்:

மலேசியாவிலிருந்து மூன்று யானைகளை ஜப்பானுக்கு இடமாற்றம் செய்ததில், அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய சுமார் 50 மில்லியன் ரிங்கிட் தொகை சில தனிநபர்களுக்கு லஞ்சமாகக் கைமாறியுள்ளதாக மலேசிய இயற்கைச் செல்வப் பாதுகாப்பு அமைப்பு (PEKA) குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, புத்ராஜாயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (SPRM) அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

காடுகளிலிருந்து பிடிக்கப்பட்ட தாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகிய மூன்று யானைகள், ஜப்பானின் ஓசாகா நகரில் உள்ள ‘தென்னோஜி’ மிருகக்காட்சிசாலைக்கு மாற்றப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பெக்கா அமைப்பின் தலைவர் இராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய இராஜேஷ் நாகராஜன், “அரசாங்கக் கருவூலத்திற்குச் சென்றிருக்க வேண்டிய 50 மில்லியன் ரிங்கிட், அதிகாரப் மட்டத்தில் உள்ள சில தனிநபர்களின் சொந்தப் பைகளுக்குச் சென்றுள்ளதாக எங்களுக்குத் நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட ஊழல் குறித்து, சம்பந்தப்பட்ட எட்டு நபர்களிடம் எஸ்பிஆர்எம் உடனடியாக முழுமையான விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இன்று இப்புகாரைச் சமர்ப்பிக்க பெக்கா அமைப்பின் பிரதிநிதிகள் சென்றபோது, எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் மறுத்ததே இந்த சலசலப்புக்குக் காரணமாக அமைந்தது.

யானைகள் இடமாற்ற விவகாரத்தில் எழுந்துள்ள இந்த அரை பில்லியன் ரிங்கிட் ஊழல் புகார், தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here