கோலாலம்பூர், ஆகஸ்ட் 8:
ஆறு மாநிலத் தேர்தல்களுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு இன்று காலை 8 மணி முதல் சுமூகமாக நடைபெற்றுவருகிறது, அங்குள்ள வாக்குப்பதிவு மையங்களின் பெரும்பாலான இடங்களில் இதுவரை வானிலை தெளிவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், இராணுவம் மற்றும் காவல்துறை பணியாளர்கள், அவர்களது மனைவி அல்லது கணவன் ஆகியோர் வாக்காளர்கள் என்ற முறையில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற சீரான முறையில் வந்து ஒத்துழைப்பு கொடுப்பதால், ஆரம்ப வாக்களிப்பு செயல்முறை சீராக நடைபெறுகிறது.
கெடா, கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களுக்கான 377 வாக்குச்சாவடிகளை உட்படுத்திய மொத்தம் 260 வாக்குப்பதிவு மையங்கள் இயங்குகின்ற அதே வேளையில், திரெங்கானு போலீஸ் தலைமையகத்தில் கோலா திரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தளுலுக்கான மூன்று வாக்குப்பதிவு மையங்களும் இயங்கிவருகின்றன.
திரெங்கானுவில், இன்று காலை வானிலை பெரும்பாலான பகுதிகளில் சீரானதாக இருந்த போதிலும் சில இடங்களில் கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலானில், இன்று காலை 10 மணி நிலவரப்படி, நல்ல வானிலை பதிவாகியுள்ளது, குறிப்பாக செண்டையன் விமானப்படை தளம், சிகாமாட் காவல் நிலையம் மற்றும் இராணுவ அடிப்படை பயிற்சி மையம் (புசாஸ்தா) மற்றும் போர்ட்டிக்சன் செஜென்டிங் கேம்ப் ஆகிய இடங்களில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் சீராக இயங்குகின்றன.
நெகிரி செம்பிலான் பராமரிப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் ஆகியோர் ஆரம்ப வாக்களிப்பு செயல்முறையை மறுஆய்வு செய்ய சம்பவ இடத்தில் இருந்தனர்.
கிளாந்தானில், குவா மூசாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஆரம்ப வாக்களிப்பு செயல்முறைக்காக பணியாளர்கள் காலை 7.30 மணிக்கே தங்கள் வாக்குச் சீட்டுகளை பதிவு செய்ய வரிசையில் நின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பெங்கலான் சேப்பாவில் உள்ள பொது இயக்க படையின் 8வது பட்டாலியன் முகாம் மற்றும் கோக் லானாஸில் உள்ள டேசா பஹ்லவான் முகாம், கோத்தா பாருவில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் வாக்களிக்க சீக்கிரமாக வந்திருந்ததை காணமுடிந்தது.
சிலாங்கூரில், ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகியவற்றில் சோதனை செய்ததில், ஆரம்பகால வாக்களிப்பு செயல்முறையானது சுமூகமாக நடந்ததைக் கண்டறிய முடிந்தது. அத்தோடு அந்த இடங்களில் வெயில் மற்றும் சாதகமான வானிலை காணப்படுகிறது.
இதற்கிடையில், கெடாவில், அலோர் ஸ்டாரில் காலை 7 மணிக்கு மழை தூறல் இருந்த போதிலும், அதன்பின் வானிலை சாதகமாக மாறியது.
இதேபோன்ற நிலை பினாங்கிலும் பதிவாகியுள்ளது, அங்கு இராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிகள் உட்பட மொத்தம் 11,294 ஆரம்ப வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 28 வாக்குப்பதிவு மையங்களில் தங்கள் வாக்கைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









