குவா மூசாங், அகஸ்ட்டு 12:
நேற்று, ஜாலான் குவா மூ சாங்-கோலாக் கிராய் சாலையின் 40 ஆவது கிலோமீட்டரில், கார் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மாலை 6.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், முஹமட் அஃப்னான் அஃபிக் சுக்ரன், 19, என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதே நேரத்தில் அக்காரின் முன் இருக்கை பயணி மற்றும் மலேசிய சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இவர்கள் தவிர மூன்று ஆம்புலன்ஸ் பயணிகள், இரண்டு தாதியர்கள் மற்றும் தலா ஒரு நோயாளிக்கு காயம் ஏற்படவில்லை.
குவா மூசாங் திசையில் இருந்து பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து, எதிர் திசையில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என்று, குவா மூசாங் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.









