கோலாலம்பூர் –
கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயற்பட்ட தாய்லாந்து பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட 23 முதல் 30 வயதுடைய சந்தேக நபர்களிடமிருந்து 520,000 ரிங்கிட் மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது என்று, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.
இந்த கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்றும், அதன் செயல் முறையானது, போதைமருந்துகளை வாகனங்களில் சேமித்துவைத்து, பின்னர்
விநியோகம் செய்வதாகும்.
கும்பலின் மூளையாக கருதப்படும் தாய்லாந்து பெண்ணை செராஸின் தாமான் கோபேனாவில் உள்ள ஒரு வீட்டின் லோபியில் வைத்த்து கைது செய்ததாகவும், சோதனையின் போது RM20,000 பெறுமதியான வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.
சந்தேகநபர்கள் அனைவரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.










