விலைவாசி சுமையில் அரிசி பிரச்சனையும் தலைதூக்கினால் எங்கள் நிலைமை என்ன ஆவது? உணவக நடத்துனர்கள், சாமானிய மக்கள் வேதனை

ராமேஸ்வரி ராஜா

கடந்த வாரம்  உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இதில் அரிசிக்கும் சிக்கல் என்றால் எங்களின் நிலை என்ன ஆவது? இப்படியே போனால் உணவகம் நடத்துவது என்பது பெரும் போராட்டமாக மாறிவிடும் என்று உணவக நடத்துனர்கள் அச்சத்தை எதிர்கொண்டுவருகின்றனர். பி40 நிலைபாட்டில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் எங்களுக்கு அரிசி, அதன் தயாரிப்பிலான சமையல் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது எளிதான காரியமா என சாமானிய மக்களும் புலம்பலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக இங்குள்ள உணவாக உரிமையாளர்கள் சிலர் மக்கள் ஓசையிடம் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டனர்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவை பரிமாறவேண்டும். சங்கடமில்லாமல் அவர்கள் உணவருந்திவிட்டு மகிழ்ச்சியாக செல்லவேண்டும். மீண்டும் நமது உணவகத்தைத் தேடி அவர்கள் வழக்கம்போல் வரவேண்டும். இதுதான் எங்களின் எதிர்ப்பார்ப்பு. ஆனால், இப்படியே விலை ஏறிக்கொண்டே போனால், எப்படி அதனை நாங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இயலும்? உணவு விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என தாப்பா நிஷா கரி ஹவுஸ் உரிமையாளரான கி. அருக்காணி, பீடோர் ‘நம்ம கடை’ உரிமையாளரான க. பவானி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

கடைக்கு வாடகை, பணியாளர்களுக்கு சம்பளம், மின்சாரம், நீர் கட்டணம், குடும்ப செலவுகள் போக சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும். வாடிக்கையாளர்கள், மக்கள் அதிகமாக வருகைப்புரிந்து ஆதரவு தந்தால்தான் செலவுகள் போக இலாபத்தைப் பார்க்க முடியும். உணவு விலையை ஏற்றும் நிலை வந்தால் கடைக்கு வருபவர்களை இழக்க நேரிடும். விலையையும் ஏற்றாமல் செலவுகளையும் விலைவாசியையும் சமாளிப்பது என்பது யோசித்துக்கூட பார்க்க முடியாத ஒன்று என அவர்கள் குமுறலை வெளியிட்டனர்.

சோரு மட்டும் சமைப்பதில்லை. மாறாக, தோசை, இட்டிலி, மீகூன், பால் அப்பம் போன்ற உணவு வகைகளுக்கும் அரிசியை பயன்படுத்துகிறோம். அரிசியின் தேவை அதிகமாகவே உணவகத்திற்கு உள்ளது. விலை ஏற்றத்தால் வருமானம் பெரிதாக குறையும் என்பது உண்மைதான். வாடிக்கையாளர்களும் சிரமப்படுகிறார்கள் என்பதால் இப்போதைக்கு விலை ஏற்றத்தை நான் மேற்கொள்ளவில்லை என பீடோர் நோர்டின் உணவகத்தைச் சேர்ந்த நோர்டின் தெரிவித்தார்.

கடிக்கும் வரும்பொழுதே அதன் விலையை நாங்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குறைந்த லாபத்தில்தான் நாங்களே அரிசி, எண்ணை, சீனி மற்றும் இதர உணவுப்பொருட்களையும் விற்பனை செய்கிறோம். விலை ஏறிவிட்டது என மக்கள் குமுறுவதை மறுக்கவில்லை. ஆனால் எங்கள் நிலைமையும் அப்படிதானே இருக்கிறது என தாப்பா மினி மார்க்கெட் எனும் பலசரக்கு கடை நடத்திவடும் த. சரஸ்வதி கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை மட்டும்தான் உயரும் என்று சொல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் போதுமான அரிசி விநியோகம் இருப்பதற்கு பெர்நாசுடன் பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட அமைச்சு ஈடுபடும் என்றும் செய்திகள் கூறுகின்றன. இப்போதைக்கு நிலைமை சுமூகமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், பிரச்சனை பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே அதன் தட்டுப்பாடுகளை காண முடிகிறது. கடந்த சில தினங்களில் அருகாமையில் உள்ள கடைகளில் அரிசி இல்லை என்று சொல்கிறார்கள். சில கடைகளில் அரிசியின் விலை உயர்த்தப்பட்டு விட்டது. வெறும் காய்கறி நட்டு குடும்ப வருமானத்தை சமாளிக்கும் எனக்கு இந்த விலை உயர்வுகள் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது என பி40 பிரிவைச் சேர்ந்த பெ. இராமச்சந்திரன் கருத்துரைத்தார்.

பிள்ளைகளின் படிப்பு, குடும்பம், பயிருக்கான செலவு என ஏற்கனவே சமாளிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல நெருக்கிக்கொண்டிருக்கும்  விலைவாசியை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கிறது. எங்களைப்போன்ற சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை நகர்வுக்கு தீர்வு தேவை எனவும் இவர் கூறினார்.

நாட்டின் உணவு பாதுகாப்ப அதிகரிக்க அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும். பொருட்களின் விலையை நிவர்த்தி செய்ய சரியான திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தீர்வுகள் விரைவாக பிறக்க வேண்டும் எனவும் இவர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பை முன்வைத்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here