உடல் பருமனாக இருப்பவர்கள் அல்லது உடலில் சேர்ந்திருக்கும் கூடுதல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்கள் எடையை குறைக்க மிகவும் சிரமப்படுவதை கண்கூடாக பார்க்கிறோம். உண்மையில் நாம் நினைப்பதை போல அவ்வளவு எளிதாக உடல் எடையை குறைத்து விட முடியாது. அன்றாட வேலைகளையும் பார்த்து கொண்டு உடல் எடையையும் குறைக்க முயற்சி மேற்கொள்வது உண்மையில் மிகவும் சவாலான விஷயம் தான். எடையை குறைக்க முயற்சிக்கும் பலரும் ஆரோக்கியமான டயட், தீவிர ஒர்கவுட், வாழ்க்கை முறை மாற்றங்கள் என பார்த்து பார்த்து பின்பற்றுவர். ஆனாலும் அவர்கள் எதிர்பார்க்கும் பலன் குறைவாக கிடைக்கும் அல்லது சுத்தமாக கிடைக்காது. இதன் பின்னணியில் வேறுஒரு முக்கிய விஷயம் இருக்கலாம்.
ஆனால் பெரும்பாலானோர் அதனை கவனிக்க தவறுகின்றனர். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ‘தூக்கம்’ தான் அது. ஆம், சிறந்த இரவு தூக்கத்திற்கும் உடல் எடைக்கும் இடையே தீவிர தொடர்பு இருப்பதை பலஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. எடையை குறைக்க முயற்சிக்கும் ஒருவர் எல்லாவற்றையும் சரியாக செய்தாலும் கூட இரவு தூக்கத்தில் தொந்தரவு அனுபவிப்பது, சரியான தூக்க அட்டவணையை பின்பற்றாமல் விடுவது, தூக்கமின்மை உள்ளிட்டவை அவரது எடை இழப்பு முயற்சியை தீவிரமாக பாதிக்கும். மோசமான தூக்கம் எடை இழப்பு முயற்சிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி இங்கே காணலாம். சரியாக தூங்காமல் இருப்பதால் எடை இழப்பு முயற்சி பாதிக்கப்படும் வழிகள்.
ஹார்மோன் சமநிலையில் பாதிப்பு: சிறந்த தூக்கம் மற்றும் எடை குறைப்புக்கும் இடையே உள்ள தொடர்புக்கு ஹார்மோன்கள் முக்கியமானதாக இருக்கின்றன. ஒருவர் தினசரி போதுமான அளவு தூங்கினால் ஹார்மோன் சமநிலை பராமரிக்கப்பட்டு அவரது எடை இழப்பு முயற்சிக்கு உதவியாக இருக்கும். அதுவே போதுமான தூக்கம் இல்லை என்றால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும். தூக்கம் – எடை இழப்புக்கான தொடர்பு என்று வரும் போது Ghrelin மற்றும் Leptin என்ற 2 ஹார்மோன்களை பற்றி நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதில் Ghrelin பசியைத் தூண்டுவதற்கு காரணமான ஹார்மோன் ஆகும். அதே நேரம் Leptin என்ற ஹார்மோன் திருப்தி மற்றும் முழுமை (fullness) உணர்வை வழங்குகிறது. சரியான இரவு தூக்கம் இல்லாமல் ஒருவர் இருக்கும் போது அவரது உடலில் Ghrelin ஹார்மோன் அளவுகள் உயர்ந்து Leptin-ன் அளவு குறைகிறது. இதனால் அதிகப்படியான உணவை உண்பதற்கான சூழல் உருவாகிறது. இதன் காரணமாக இரவோ அல்லது பகலோ அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து எடை இழப்பு முயற்சியில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மிட்நைட் கிரேவிங்ஸ்: சரியான இரவு தூக்கம் இல்லாதது ஹார்மோன் அளவுகளை மட்டும் பாதிப்பதில்லை. குறிப்பாக மூளையின் reward centres-யும் பாதிக்கிறது. இதன் காரணமாக தூக்கமின்மை உணவு வேட்கையை குறிப்பாக அதிக கலோரி, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை எளிதில் ஏற்படுத்தி விடுகிறது. இதனால் எடை இழப்பு முயற்சி கணிசமாக பாதிக்கப்படுகிறது.
ஆற்றல் இழப்பு: பல நாட்கள் தூக்கமில்லாத இரவை அனுபவித்த பலரும் அதற்கடுத்த நாள் காலை அல்லது அடுத்த நாள் முழுவதும் போதுமான எனர்ஜி இல்லாமல் மந்தமாக இருப்பதை நன்கு உணர்ந்திருப்பார்கள். போதுமான தூக்கம் இல்லாததன் காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பானது அன்றாட உடல் செயல்பாடு அளவையும் வெகுவாக பாதிக்கும். சோர்வாக இருக்கும் போது நீங்கள் ஜிம்மிற்கு செல்வது அல்லது ரன்னிங் செல்வதை விரும்ப மாட்டீர்கள். வழக்கமான ஒர்கவுட்ஸ் இல்லாததன் விளைவாக, அந்த நாள் முழுவதும் குறைவான கலோரிகளை மட்டுமே எரிப்பது உடல் எடை குறைப்பு முயற்சியை பாதிக்கிறது.
ரெக்கவரி ஃபேக்டர்: ஒர்கவுட்ஸ்களை செய்த பிறகு சோர்விலிருந்து உடலை மீட்க மற்றும் புத்துணர்ச்சியாக வைக்க தூக்கம் மிக முக்கியமானது. ஏனென்றால் ஆழ்ந்து தூங்கும் போது நம் உடலானது தசைகளை (muscle) ரிப்பேர் மற்றும் ரீபில்ட் செய்கிறது. ஒருவேளை நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால் உடல் சரியாக புத்துணர்ச்சி அடையாமல் போகலாம். இதன் காரணமாக கூட உங்களின் உடற்பயிற்சி செயல்திறன் குறையும், தவிர தசை இழப்பு (muscle loss) ஏற்பட வழிவகுக்கும்.
தரமான தூக்கத்திற்கான வழி: மேலே நீங்கள் பார்த்த விஷயங்கள் நல்ல இரவு தூக்கத்திற்கும் – எடை இழப்புக்கும் இடையே உள்ள தொடர்பை உங்களுக்கு புரிய வைத்திருக்கும். எனவே தினசரி இரவு நேரத்தில் குறைந்தபட்சம் 7 மணி நேரங்கள், அதிகபட்சம் 9 மணி நேரங்கள் தொந்தரவின்றி நிம்மதியாக தூங்க வேண்டும். உடலுக்கு உறுத்தாத மற்றும் சூட்டை கிளப்பாத நல்ல மெத்தை, வெப்பம் குறைந்த குளிர்ச்சியான சூழல் நிலவும் பெட்ரூம் மற்றும் தூங்க செல்லும் முன் கேஜெட்ஸ்களை பார்ப்பதை குறைத்தல் உள்ளிட்டவை சிறந்த தூக்கத்திற்கு உதவும்.
சுருக்கமாக சொன்னால் ஒருவர் தனது எடை இழப்பு பயணத்தில் ஒர்கவுட்ஸ் மற்றும் ஆரோக்கியமான டயட்டை தொடர்ந்து பின்பற்றினாலும் கூட சரியாக தூங்காவிட்டால் உரிய பலன் கிடைக்காது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர் என்றால் ஒரு நல்ல இரவு தூக்கம் இன்றியமையாத ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.




















