சிங்கப்பூர்:
கம்பிவடங்களை இழுக்கும் பணியின்போது நிகழ்ந்த விபத்தில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து, பாசீர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணிவாக்கில் நிகழ்ந்ததாக சிங்கை மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவைச் சேர்ந்த அந்தக் கட்டுமான ஊழியர் கம்பிவடங்களை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கம்பிவட உருளையைத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த எஃகுத் தாங்கி ஒன்று விலகியதால், எஃகுக் கம்பி ஒன்று அவர்மீது விழுந்ததாக அமைச்சு விளக்கியது.
34 வயதான பாதிக்கப்பட்ட ஆடவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின்றி அவர் அங்கு உயிரிழந்தார்.
அவர் ‘அலையன்ஸ் இ&சி’ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விபத்தையடுத்து, அந்த வேலையிடத்தில் அனைத்துக் கம்பிவடப் பணிகளையும் நிறுத்தி வைக்கும்படி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அது கூறியது.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் வேலையிடங்களில் நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு வேலையிட விபத்துகளில் கட்டுமான ஊழியர்கள் இருவர் மாண்டனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நிகழ்ந்த 14 வேலையிட மரணங்கள் குறித்து அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.